குர்பானியின் சட்டங்கள் - Qurbani

/
0 Comments

குர்பானியின் சட்டங்கள்

துல்ஹஜ் மாதம் முதல் 10 நாட்களின் சிறப்பு:

அதிகாலையின் மீது ஆணையாக :
இன்னும் பத்து இரவுகளின் மீது ஆணையாக;
(அல்குர்ஆன்)

நல்ல அமல்கள் செய்யப்படும் நாட்களில், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை விட, அல்லாஹ்விற்கு பிரியமான (நாட்கள் வேறொன்றும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். இதை செவியுற்ற நபிதோழர்கள், அல்லாஹ்வின் திருத்தூதரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதுமா சிறப்பிற்குரியது அல்ல எனக் கேட்டனர்.
ஆம்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதும் கூட (இந்நாட்களின் சிறப்பிற்கு ஈடானது அல்ல) என்று நபியவர்கள் பதில் கூறிவிட்டு, ஆனால் ஓருவர் தனது சரீரத்துடனும், பொருளுடனும் அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டு, உயிரையும், பொருளையும் தியாகம் செய்தவரின் அமல்களை தவிர என்று விளக்கம் கொடுத்தார்கள்.(அல்லாஹ்வின்! பாதையில் ஷஹீதானவரின் அமல் இப்புனிதமிகு நாட்களில் செய்யப்படும் அமல்களைப்போன்று அல்லாஹ்விற்கு மிகப்  பிரியமானதாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி

பத்தாம் நாள் காலையில் மீதும், துல்ஹஜ் பத்து இரவுகளின் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்திருப்பது, அதன் உன்னதத் தன்மையை எடுத்து காண்பிக்கிறது.

இந்நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்கள்; ஜிகாது எனும் புனித அமலின் சிறப்பை விட உயர்வைப் பெற்றுள்ளன என்றும், ஷஹீதுகளின் தியாகத்திற்கு ஈடானவை பெற்றுள்ளன என்றும் அல்லாஹ்வின் தூதர் தன்னுடைய அருள் மொழியில் கூறியுள்ளார்கள் எனவே நாம் இந்நாட்களை பயனுள்ள நாட்களாக ஆக்க கடமைப்பட்டுள்ளோம்.

அரஃபா நாட்களின் நோன்பு:
அர ஃபா நாட்களில் நோன்பு நோற்பது, சென்ற ஆண்டின் சிறு பாவங்களுக்கும் வரும் ஆண்டின் சிறு பாவங்களுக்கும் பரிகாரமாக அமையும் என்று அல்லாஹ்வை ஆதரவு வைக்கிறேன் என்றார்கள் நபிகள் தாயகம்(ஸல்)
நூல்: முஸ்லிம்- 2738,  திர்மதி பக்கம் - 93
மக்காவில் ஹஜ்ஜுடைய அமலை செய்துக்கொண்டிருக்கும் ஹாஜிகள் அல்லாத மற்றவருக்கு அர ஃபா நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

குர்பானியின் சிறப்பு:

குர்பானி மிக முக்கிய வணக்கங்களில் ஒன்றாகும். இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் உள்ளதாகும். இஸ்லாம் அல்லாத மதங்களிலும் குர்பானி வணக்கம் வழிபாடுகளில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சிலைகளுக்கும், சிலுவைகளுக்கும், பிராணிகளை அறுத்து பலியிட ஆரம்பித்துவிட்டார்கள். வேறு சிலரோ, பேய்கள், பிசாசுகள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு ஆடு, மாடு மிருகங்களை அறுத்து பலியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இஸ்லாம் இவைகளையெல்லாம் தடுத்து, உயிரைப்பலியிடுவதல் அவைகளைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும், வேறு யாருக்கும் பலியிடக்கூடாது என்று தடை விதித்துவிட்டது.

கவ்ஸர் என்ற அத்தியாயத்தில், அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு கட்டளையிட்டுள்ளான், ஃபஸல்லி-லிரப்பிக-வன்ஹர்....தொழுகை எப்படி அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்றவேண்டுமோ அதைப்போல் குர்பானியும் அல்லாஹ்வுக்கு மட்டுமே நிறைவேற்றவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

என்னுடைய தொழுகை, என்னுடைய குர்பானி, என்னுடைய வாழ்வு, என்னுடைய மரணம் அனைத்துமே அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் அகில  உலகம் அத்தனையும் படைத்து இயக்கி வருபவன் என்று அல்லாஹ் தன் அருள் மறையில் இன்னொரு இடத்தில் கூறியுள்ளான்.

நம்முடைய நபியவர்கள் மதீனாவில் பத்து ஆண்டுக்காலம் வாழ்ந்தார்கள், ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்தார்கள்.
நூல்-திர்மிதி

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல் வேறொன்றும் இல்லை. நிச்சயமாக அவை கியாமநாளில் தங்களின் கொம்புகளுடனும், உரோமங்களுடனும், குளம்புகளுடனும் வரும்; நிச்சயமாக குர்பானிக் கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை அக்குர்பானி பெற்று விடுகிறது. எனவே அதனை மனமுவந்துச் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
அறிவிப்பவர்-அன்னை ஆயிஷா(ரலி), திர்மிதி-180, இப்னு மாஜா-233

அல்லாஹ்வின் தூதரே! இந்தக்குர்பானி, அது என்னவென்று சொல்லுங்கள் என நபியின் தோழர்கள் கேட்டார்கள், அதற்கு உங்களின் தந்தை இபுராஹிம் (அலை) அவர்களின் சுன்னத் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே!  அதை நிறைவேற்றுவதிலே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று நபிதோழர்கள் கேட்க, ஒவ்வொரு முடிகளுக்கும் ஒரு நன்மை கிடைக்கும் என்றார்கள். மீண்டும் அடர்த்தியாக முடியிருக்கும் செம்மறி ஆட்டின் முடியிலே என்ன கிடைக்கும் என்று கேட்க, செம்மறி ஆட்டின் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்.
அறிவிப்பாளர்-ஜைதுபின் அர்கம்  (ரலி)
நூல்: இப்னு மாஜா பக்கம் 233 ; அஹ்மது - 18797

குர்பானிக்கடமையானவர்கள் துல்ஹஜ் பிறை 1-க்கு முன்பே தலைமுடி, தாடி, மீசை, தொப்புளுக்கு கீழ் உள்ள முடிகளையும், நகங்களையும் சரி செய்துக் கொள்ளவேண்டும். பிறை 1 இருந்து குர்பானி கொடுக்கும் வரை முடிகளையும், நகங்களையும், வெட்டாமல் இருப்பது முஸ்தஹப்பான விரும்பத்தக்க செயலாகும்.

குர்பானி கடமையானவர்கள்:

குர்பானி கொடுப்பது யார் மீது வாஜிபு?

87 1/2 கிராம் தங்கம், பவுன் அல்லது 612 1/2 கிராம் வெள்ளி அல்லது அதனுடைய பெருமானமுள்ள ரூபாய்கள், வணிகப் பொருட்கள் மற்றும் தேவையை விட கூடுதலாக உள்ள பொருட்களை பெற்றிருப்பவர் மீது குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.

தேவையை விட கூடுதலாக உள்ள பொருட்கள் யாவை:

குடியிருக்கும் வீடு, ஒவ்வொரு நாளும் தேவைப்படும் உணவுப்பொருட்கள், உபயோகத்தில் உள்ள ஆடைகள், வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் தளவாட சாமான்கள் இவை வாழ்க்கைக்கு தேவையான மிக அவசியப் பொருட்களாகும்.
(சான்று:
ஒரு வீட்டை விட அதிகமாக இருக்கும் வீடுகள், மனைகள், ஒரு வாகனத்தைவிட கூடுதலாக இருக்கும் வாகனங்கள், குடும்ப உணவுத் தேவைக்கு போதுமான விளைச்சலைத்தரும் வயல்களை விட கூடுதலாக இருக்கும் வயல்கள், நிலங்கள், பயிர்கள், தோப்புகள், மூன்று ஜோடி ஆடைகளை விட கூடுதலாக இருக்கும் ஆடைகள், அன்றாட தேவையான பாத்திரங்களை விட கூடுதலாக உள்ள பாத்திரங்கள், வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்தும் அளவிற்கு உள்ள மேஜை, நாற்காலி, சோபா இவைகளை விட கூடுதலாக உள்ள ஃபர்னிச்சர்கள் போன்றவைகள் இருந்து 612 1/2கிராம் வெள்ளியின் விலைக்கு இன்றைய காலகட்டப்படி சமமாக இருந்தால் அதற்குரிய உரிமையாளர்கள் குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.)

ஒருவரிடம் தங்கமும், வெள்ளியும் சொல்லப்பட்ட அளவை விட குறைவாக இருந்து, அவை இரண்டையும் சேர்த்து கணக்கிட்டால் அது 612 1/2 கிராம் வெள்ளியின் விலைக்கு சமமாக இருந்தால் அவர் மீதும் குர்பானி வாஜிபாகும்.

குர்பானி கடமையாகும் அளவிற்கு செல்வத்தை பெற்றிராத ஏழை, ஆர்வத்தின் காரணமாக குர்பானி பிராணி வாங்கிவிட்டால், அந்த ஏழை மீதும் வாஜிபாகும்.

வெளியூரில் தங்கியிருந்த செல்வ வசதியுடைய முஸாஃபிர், துல்ஹஜ்   பிறை 10, 11, 12 இம்மூன்று தினங்களில் தன் இருக்குமிடம் வந்துவிட்டால் அவர் மீது வாஜிபாகும்

ஒருவர், துல்ஹஜ் பிறை 9 வரை குர்பானி கடமையாக தேவையான அளவு வசதி கிடையாது, இந்த துல்ஹஜ் 10, 11, 12 தினங்களில் வசதிபெற்றுவிட்டால் அவர் மீதும் குர்பானி வாஜிபாகும்.

குர்பானி யாரின் மீது கடமையாகாது?
வெளியூரில் முஸாஃபிராக தங்கியிருப்பவர்கள் மீது குர்பானி வாஜிபாகாது.
சிறுவர்கள், சிறுமிகள், பைத்தியக்காரர்கள் மீது குர்பானி வாஜிபாகாது.இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ள நிஸாபுடைய அளவிற்கு அவர்கள் செல்வம் பெற்றிருந்தாலும் சரியே.

குர்பானியின் காலங்கள்:

# துல்ஹஜ் பிறை 10 காலை முதல், 12 மாலை சூரியன் மறையும் வரை

# முதல் நாள் தருவது சிறந்தது, இரண்டாவது, மூன்றாம் நாள் அடுத்தது சிறந்தது.

# பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி தரக்கூடாது.

# மூன்று நாட்களில் இரவிலும், பகலிலும் தரலாம். பகலில் தருவது சிறந்தது. இரவில் தருவது மக்ரூஹான செயலாகும்.

குர்பானிக்கு பகரமாக சதகா:

குர்பானிக்கு கடமையானவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் இவைகளை அறுத்து இரத்தத்தை ஓட்டுவது அவசியமாகும். இதற்கு மாறாக குர்பானி மிருகங்களில் விலையை சதகாவாக, தானதர்மமாக ஏழைகளுக்கு கொடுத்தால் குர்பானி கடமை நிறைவேறாது. இப்படிச் செய்பவர் குற்றமிழைத்தவராக ஆகிவிடுவார்.

குர்பானி கடமையானவர், இந்த மூன்று நாட்களுக்குள் குர்பானியை நிறைவேற்றவில்லையென்றால், மூன்றுநாட்களுக்கு பின் அதை அறுத்து குர்பானிகொடுப்பது கூடாது; அவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குர்பானி பிராணியின் விலையை சதகா செய்திடவேண்டும்.

ஒருவர் குர்பானிக்காக பிராணியை வாங்கி அதை வளர்த்து பாதுகாத்து வந்தார். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நாட்களில் அதை அறுத்து குர்பானியை நிறைவேற்ற இயலாமல் ஆகிவிட்டார். அதை அப்படியே சதகா செய்துவிடவேண்டும். அதை அறுப்பதும், அதன் இறைச்சியை அவர் சாப்பிடுவதும் கூடாது.

குர்பானியின் ஒழுக்கங்கள்:

1.குர்பானி பிராணிகளை சில நாட்களாவது, தன் சொந்த பொறுப்பில் வளர்ப்பது சிறப்பிர்க்குறியதாகும்.

2, அதை அறுக்கும் கத்தி கூரிய முனை உள்ளதாகவும், நல்ல சுனையுடையதாகவும் இருக்க வேண்டும்.

3, ஒரு மிருகத்தை இன்னொரு மிருகத்திற்கு முன்னால் வைத்து அறுக்கக்கூடாது. அறுத்து சூடு அடங்கி, குளிர்ந்த பின்பு தான் தோலை உரிக்கவேண்டும்.

4, கிப்லாவை முன்னோக்கி படுக்கவைத்து அறுக்கவேண்டும். வலது கரத்தினால் அறுக்கவேண்டும்.

5, பெண்களும் அறுக்கலாம், பெண்கள் அறுப்பது மக்ரூஹ் என்பது தவறான கருத்தாகும்.

6, குர்பானி கொடுப்பவர் தன் கரத்தால் அறுப்பது மிகச் சிறந்த செயலாகும்.

7, அறுக்கத் தெரியாதவர், அறுக்க இயலாதவர், மற்றவருக்கு அனுமதிக் கொடுத்து அறுக்கச் சொல்லவேண்டும்.

8, அறுக்கப்படும்போது முன்னால் நின்று பார்ப்பது சிறப்பானதாகும்.

9, பெண்கள் அறுப்பதற்கு அனுமதி கொடுப்பதே போதுமானதாகும்.

10, குர்பானிக்கான நிய்யத் செய்யவேண்டும்

11, பிஸ்மில்லாஹி அல்லாஹு அப்பர் என்று சொல்லி அறுக்கவேண்டும்.

12, ஹதிஸில் வந்துள்ள துஆக்கள் ஓதுவது முஸ்தஹப்பான (விரும்பதக்க) செயலாகும்.

13, குர்பானி கொடுக்கும்போது ஓதப்படுகின்ற துஆ.

بسم الله الله اكبر ، اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا
ﻭﻣﺎ ﺍنا من ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ، ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين.

பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ( அறுக்குகிறேன்), அல்லாஹ் மிகப்பெரியவன். நான் சத்தியத்தின்பால் சாய்ந்தவனாக இருக்க வானங்களையும், பூமிகளையும் படைத்தல் அல்லாஹ்வுக்கு என்னுடைய முகத்தை முன்னோக்க செய்துவிட்டேன். நான் இணை வைப்பவர்களில் உள்ளவன் அல்ல. என்னுடைய தொழுகை, குர்பானி, வாழ்க்கை, மரணம், அனைத்தும்  ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே சொந்தம்.

14, குர்பானி அறுத்து கொடுத்ததற்குப்பின் ஓதப்படுகின்ற துஆ.

اللهم تقبله مني ﻛﻤﺎ تقبلت من حبيبك ﻣحمد
  ﻭﺧﻠﻴﻠﻚ ابراهيم  عليها ﺍﻟﺴﻼﻡ .

பொருள்: அல்லாஹ்வே உன்னுடைய நேசர் முஹம்மது (ஸல்) அவர்களின் குர்பானியையும், உன்னுடைய நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் குர்பானியையும் ஏற்றுக் கொள் கொண்டதைப் போல் என்னுடைய குர்பானியை ஏற்றுக்கொள்.

குர்பானிக்கு அனுமதிக்கப்பட்ட மிருகங்கள்:

# ஆடு, மாடு, ஒட்டகம் இந்த மூன்று மட்டுமே குர்பானியில் அனுமதிக்கப்பட்ட கால்நடைகளாகும்

# ஆடுகளில் செம்மறி ஆடு, வெள்ளாடு, தும்பை ஆடு, ஆண் ஆடு, பெண் ஆடு பொன்றவைகளும், மாடுகளில் பசு, காளை, கடேறி எருமை போன்றவைகளும், ஒட்டகங்களில் ஆண்,பெண் போன்றவைகளும் அனுமதிக்கப்பட்டவைகளாகும். இவை அல்லாதவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.

# குர்பானி ஆடு ஒரு வருடம் முழுமை பெற்றாக இருக்கவேண்டும். ஒரே ஒரு நாள் குறைந்திருந்தாலும் குர்பானி கூடாது.

# குர்பானி மாடு இரண்டு ஆண்டு முழுமை பெற்றதாக இருக்க வேண்டும்.

# ஒட்டகம் ஐந்து வருடம் முழுமைப்பெற்றதாக இருக்கவேண்டும். இவைகளை விட குறைந்த வயதுடைய ஆடு, மாடு, ஒட்டகத்தை குர்பானி தருவது கூடாது.

# தும்பை அல்லது செம்மறி ஆட்டின் வயது ஆறு மாத்தைவிட கூடுதலாக இருந்து, அதனுடைய வளர்ச்சி ஓர் ஆண்டு முழுமை அடைந்த தும்பை, செம்மறி ஆட்டின் வளர்ச்சிக்கு ஒத்து பெருப்பாக, சதைப்பற்று உள்ளதாக இருந்தால் அதைக் குர்பானி கொடுப்பது கூடும்.

# குட்டிப்போடும் பருவத்தில் உள்ளவைகளை குர்பானி கொடுப்பது நல்லதல்ல மக்ரூஹ் ஆகும். எவராவது அப்படிப்பட்டதை கொடுத்து, குட்டி உயருடன் வெளியானால் அதையும் குர்பானி கொடுத்து விட வேண்டும்

# குறைகள் உள்ளவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.
-> கண் குருடாக உள்ளவை, ஒற்றைக்கண் பார்வை உள்ளவை, மூன்றில் ஒரு பங்கு அல்லது அதை விட கூடுதலாக கண் பார்வை அற்றவை, காது அறுபட்டவைகளை குர்பானி தருவது கூடாது.

-> பால் மடு அறுக்கப்பட்டவைகளை, எலும்பும் தோலுமாக உள்ளவை, ஆண்குறி, பெண் குறி இரண்டுமே உள்ளவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.

-> சொறி ஏற்ப்பட்டு அந்த சொறியின் குணப்பாடு சதைகளை தாக்கியிருந்தால் அவைகளை குர்பானிக்கொடுப்பது கூடாது. அந்த சொறி தோலில் மட்டுமே இருந்தால் அதைக் குர்பானி கொடுக்கலாம்.

-> கொழுத்த, பெருத்த, சதைப்பற்றுள்ள, அழகான தோற்றமுள்ள ஆடு, மாடு, ஒட்டகங்களை குர்பானி கொடுப்பது மிகச் சிறந்த செயலாகும்.

-> மூன்று கால்களால் மட்டும்  நடக்கும் நொண்டிப்பிராணிகளை, குர்பானி கொடுப்பது கூடாது. நான்காவது காலை பூமியில் வைத்து நொண்டி, நொண்டி நடத்தால் அதைக் குர்பானி கொடுக்கலாம்.

-> பற்கள் அறவே இல்லாதவைகளையும், பாதிக்குமேல் பற்கள் விழுந்ததைகளையும் குர்பானி கொடுப்பது கூடாது.

-> பிறப்பிலேயே இரு காதுகள் இல்லாதவைகளையும், ஒரு காது இல்லாதவைகளையும் குர்பானி கொடுப்பது கூடாது. பிறப்பிலேயே சிறிய காதுகள் உள்ளவைகளை குர்பானி கொடுப்பது கூடும்.

-> முன்றில் ஒரு பங்கு அல்லது அதை விட கூடுதலாக வால் அறுப்பட்டவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.

-> பிறப்பிலேயே கொம்புகள் இல்லாதவைகளை குர்பானி கொடுக்கலாம், கொம்புகள் இருந்து அது உடைந்து, அது மேலோட்டமாக உடைந்திருந்தால், அதையும் குர்பானி கொடுக்கலாம். அது முற்றிலுமாக உடைந்து, அதனுடைய வேர் பாகமும் வெளியாகியிருந்தால் அதைப்பு குர்பானி கொடுப்பது கூடாது.

-> விதை அடிக்கப்பட்டவைகளை குர்பானி கொடுப்பது கூடும் என்பது மட்டுமல்ல அது சிறந்ததுமாகும்.

-> குர்பானிக்காக ஆடு, மாடு, ஒட்டகங்கள் வாங்கும்போது எந்தக்குறைகளும் இல்லாமல் இருந்து, வாங்கிய பின்பு குறைகள் ஏற்பட்டுவிட்டால், அதற்குரியவர், குர்பானி கடமையானவராகவும், வசதி உள்ள செல்வந்தராகவும் இருந்தால், குறைகள் இல்லாத வேறொன்றை வாங்கி, குர்பானி செய்யவேண்டும். குர்பானி கடமையில்லாதவராக இருந்தால், அதையே குர்பானி செய்து விடலாம்.

-> குர்பானி கொடுக்க, அதை படுக்க வைக்கும் போது ஏதேனும் உறுப்புகளில் குறைகள் ஏற்பட்டால், அதில் எந்த தவறும் இல்லை. அதையே குர்பானி கொடுத்து விடலாம். அது குர்பானியாக நிறைவேறி விடும்.

ஆக்கம்:

மௌலானா காரி நூருல் அமீன் ஹஜ்ரத்,
கடலூர் மாவட்டம் தலைமை காஜி.



You may also like

No comments:

Powered by Blogger.