அமீரக ஜும்மா குத்பா - 18th October 2013

/
0 Comments

தலைப்பு:

சமூக ஒற்றுமை

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். முஃமீன்கள் உள்ளங்களை ஒற்றுமையாக இணைத்துள்ளான். பரிசுத்த நாயனான அவனை உரிய முறையில் புகழ்கிறேன். மேலும் எங்கள் திருநபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் புனிதமிக்க குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த தோழர்கள் அனைவர் மீதும், உலக முடிவு நாள் வரை அழகிய முறையில் அந்த தோழர்களை பின்பற்றி நடக்கும் முஸ்லிம்கள் மீதும் இறைவா நீ ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவாயாக!!!

கவனமாக கேளுங்கள்! இறைவனுக்கு அஞ்சி நடப்பதை எனக்கும் உங்களுக்கும் உபதேசிக்கிறேன்.

வல்ல அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:(9:119)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

“நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்”

முஸ்லிம்களே!! விண்ணிலும், மண்ணிலும் எதுவும் அவனை விட்டு மறைந்துவிடாது. தான் நாடியவாறு அடியார்களின் உள்ளங்களை திருப்புகிறான். தனது வல்லமையால் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். எனவே பகைமை உணர்வை அகற்றி பாச உணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் அவனிடமே இருக்கிறது. தனிமையை அகற்றிவிட்டு ஒற்றுமையை ஏற்படுத்துகிறான். கண்ணியத்தையும், பொது நலனையும் கருதியே இவ்வாறு தனது ஆற்றலை வெளிப்படுத்துகிறான்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (8:63)


وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

“அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பையூட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உங்களால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை அன்பின் மூலம் ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்”

எனவே உள்ளத்தில் ஏற்படும் இணக்கத்தை அல்லாஹ் தனது முஃமீனான அடியார்களுக்கு ஏற்படுத்துகிறான். அதன்மூலம் அவர்களுக்கிடையில் நெருக்கத்தையும், அன்பையும், அக்கறையையும் உறுதிப்படுத்துகிறான். எனவே அவர்கள் தங்களுக்கிடையில் அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரே உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது.

இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:


مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
“அன்பை பரிமாறிக்கொள்வதிலும், பாசத்தை பொழிவதிலும், நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதிலும் முஃமீன்களுக்கு உதாரணம், ஒரு உடலை போன்றது. அந்த உடலில் ஏதேனும் ஒரு உறுப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஏனைய உறுப்புகளும் அக்கறையுடன் காய்ச்சலினால் பாதிப்படைகிறது”
( مسلم:4685)

எனவே ஒரு நல்ல உள்ளம் என்பது தனது சகோதர முஸ்லிம்களுக்காகவே அக்கறை செலுத்த வேண்டும், பரிபூரணமாக உதவ வேண்டும், அடுத்தவருக்கு ஒரு பதிப்பு என்றால் தனது உள்ளத்தில் நிம்மதியின்றி தவிக்க வேண்டும், இன்பதுன்பங்களில் பங்கெடுத்து கொள்ளவேண்டும்.

நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
“உங்களில் ஒருவர் தனக்காக (கிடைக்க வேண்டும் என்று) நேசிப்பவற்றை தனது சகோதரருக்கு (ம் கிடைக்க வேண்டும் என்று) நேசிக்காதாவரை அவர் முஃமீனாக ஆக மாட்டார்”( البخاري : 12)

எனவே ஒரு முஃமீன் தனக்கு ஆசைப்பட்ட ஒன்று தனது சகோதரனும் தன்னை போலவே பெற வேண்டுமென அக்கறை கொள்ளவேண்டும்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹூமா அவர்கள் கூறுகிறார்கள்: திருமறை வசனம் எனக்கு கிடைத்தவுடன் அதனை விளக்கத்தையும் அறிந்து கொள்வேன். பிறகு மனிதர்கள் அனைவரும் நான் பெற்ற விளக்கத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுவேன். (فتح الباري لابن رجب :1/21)

அல்லாஹ்வின் அடியார்களே! மனிதர்களிடம் அன்பை பெறுவதை ஒவ்வொரு முஸ்லிமும் தனது இலக்காக கொள்ளவேண்டும். அதன் மூலம் தனது இறைநம்பிக்கையை உறுதி செய்துகொள்ளலாம். அல்லாஹ் தன்னை நேசிக்க வேண்டும் என்கிற நோக்கில் அவர்களை உண்மையாக நேசிக்க வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (19:96)
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا
“நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்”

மேல்கூறிய வசனத்திற்கு பின்வரும் விளக்கம் கிடைக்கிறது: அளவற்ற நேசம் என்பது இவ்வுலகில் மனிதர்களை அக்கறையுடன் நேசிப்பதாகும். காரணம் மக்கள் ஒருவரை நேசிக்கும்போது அல்லாஹ் அவரை பிரியமுடன் ஏற்றுக்கொள்கிறான். ஒருவர் மக்கள் மீது கொண்ட அன்பிற்காவும், நேசத்திற்காகவும் அல்லாஹ் அவருக்கு கிருபைகள் பொழிகிறான்.( تفسير الطبري :18/262)

இப்படி அல்லாஹ் அந்த அடியானை நேசிக்கும்போது, வானம், பூமியில் உள்ளவர்களையும் அந்த அடியானை நேசிக்க வைக்கிறான்.

நற்குணத்தின் நாயகர் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்:


إِذَا أَحَبَّ اللَّهُ العَبْدَ نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ القَبُولُ فِي الأَرْضِ

“அல்லாஹ் ஒரு அடியானை நேசித்து விட்டால் ஜிப்ரஈல் மலக்கை அழைத்து, “நிச்சயமாக அல்லாஹ் (வாகிய நான்) இன்ன அடியானை நேசிக்கிறேன், எனவே நீயும் அவரை நேசியும்” என்று கூறுவான். உடனே ஜிப்ரஈலும் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரஈல் (அலை) அவர்கள் விண்ணில் உள்ளவர்களை அழைத்து, “நிச்சயமாக அல்லாஹ் இன்ன அடியானை நேசிக்கிறான், எனவே நீங்களும் அந்த அடியானை நேசியுங்கள்!” என்று கூறுவார்கள். உடனே விண்ணில் உள்ளவர்கள் அவரை நேசிப்பார்கள். பிறகு பூமியில் உள்ளவர்களிடம் அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்”
( البخاري : 2970)
அதாவது பூமியில் உள்ளவர்கள் அந்த அடியானை நேசிப்பார்கள், அவரை முழுமையாக பொருந்திக்கொள்வார்கள். அவரை நோக்கியே உள்ளங்கள் கவனம் கொள்ளும். அவரிடம் திருப்தி பெற ஆசைப்படுவார்கள். (شرح صحيح مسلم للنووي : 8/279)

மனிதர்களிடம் நேசத்தை வளர்ப்பது மனித நேயத்திற்கு அடிப்படையாகும், அன்பின் இலக்கணமாகும். சுய இலாபத்தை நோக்கமாக கொள்ளாமல் அல்லாஹ் ஒருவனுக்காகவே அந்த நேசம் அமைய வேண்டும். ஒருவரை நேசிப்பதற்கு அடிப்படை அல்லாஹ் ஒருவனாகவே இருக்க வேண்டும். நாம் நேசிப்பவர்களை அடிக்கடி சென்று சந்திக்க வேண்டும். அனைத்து சுக துக்கங்களிலும் கலந்து கொள்ளவேண்டும். பிரதிபலனை நோக்கமாக கொள்பவர்கள் பின்வரும் ஹதீஸை நாம் சிந்திக்க வேண்டும்:


أَنَّ رَجُلًا زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى، فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا، فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ: أَيْنَ تُرِيدُ؟ قَالَ: أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ. قَالَ: هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا؟ قَالَ: لَا غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ. قَالَ: فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ

வேறு ஒரு கிராமத்தில் இருக்கும் தனது சகோதரனை ஒரு மனிதன் சந்திக்க செல்கிறான். அந்த மனிதரிடம் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்புகிறான். அந்த மலக் அவரிடம் வந்தவுடன், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்பார். “இந்த கிராமத்தில் எனது சகோதரனை சந்திக்க செல்கிறேன்” என்று அந்த மனிதர் பதில் கூறுவார். மறுபடியும் மலக், “அவர் உனக்கு தரவேண்டிய வெகுமதி ஏதேனும் உள்ளதா?” அதற்கு அந்த மனிதர், “இல்லை, கண்டிப்பாக நான் அல்லாஹ் ஒருவனுக்காகவே அவரை நேசிக்கிறேன்” என்று கூறுவார். உடனே மலக், “அல்லாஹ் என்னை உன்னிடம் (ஒரு தகவல் சொல்ல) தூதராக அனுப்பியுள்ளான். நீ அந்த சகோதரரை அல்லாஹ்விற்காக நேசிப்பதைபோன்று கண்டிப்பாக அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான்” என்று சோபனம் கூறி செல்வார்கள்.( مسلم : 4656)

எனவே யார் அல்லாஹ்விற்காக முஃமீன்களை நேசிக்கிறீர்களோ அவர்களுக்கே இத்தகைய சோபனம்.

முஃமீன்களே! ஒரு சமூகத்தில் ஒவ்வொரு தனி நபரும் சிறந்த நற்குணங்களுடன் பழகினால் ஒற்றுமை வளரும். உள்ளத்தில் நேசம் அதிகரிக்கும். 


إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا 

“உங்களில் நற்குணம் நிறைந்தவரே நிச்சயமாக உங்களில் எனக்கு மிக நேசத்திற்குரியவராக இருப்பார், மேலும் நாளை மறுமை நாளில் என்னிடம் நெருக்கமாக இருப்பார்”( الترمذي : 2018)
இதனாலேயே நற்குணம் நிறைந்தவர் ஒற்றுமையாக இருப்பார், ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வார். தன்னை புறக்கணிப்பவரிடமும் பழகுவார். தன்னை வெறுப்பவருக்கும் கொடுத்து மகிழ்வார். தனக்கு கேடு நினைப்பவருக்கும் நன்மை செய்ய ஆர்வம் கொள்வார். திருமறை கூறுகிறது: 41:34


وَلا تَسْتَوِي الْحَسَنَةُ وَلا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ

“நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள்”

ஸலாம் சொல்வதை அதிகரிப்பதின் மூலம் ஒற்றுமை வளரும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். ஸலாம் கூறி ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகிறது:
لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ
“நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை சொர்கத்திற்குள் நுழைய முடியாது. ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளாதவரை நீங்கள் இறைநம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒரு காரியத்தை செய்தால் அதன் மூலம் நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்ள முடியும், அந்த காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களுக்கு ஸலாம் சொல்வதை அதிகப்படுத்தி பரப்புங்கள்” (مسلم : 81)

அன்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், ஹத்யா கொடுப்பதை நமது இஸ்லாமிய மார்க்கம் அழகான அமல் என்று கூறுகிறது. பின்வரும் ஹதீஸில் அப்படித்தானே வருகிறது.
تَهَادُوا تَحَابُّوا
“ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுங்கள், ஒருவருக்கொருவர் அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்”( البخاري في الأدب المفرد 1/208)

மனிதர்களிடம் உள்ள பொருட்களை கண்டு பேராசை படவேண்டாம் என்று நம்மை இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.

ஒரு மனிதர் இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, “இறைதூதரே! ஒரு நல்அமலை பற்றி எனக்கு சொல்லுங்கள். அந்த அமலை நான் செய்தால் அல்லாஹ்வும் என்னை நேசிப்பான், மேலும் மக்களும் என்னை நேசிப்பார்கள்” என்று கேட்டார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்:
ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّوكَ
“இந்த உலகில் உள்ள பொருட்கள் மீது பற்றற்று வாழ் அல்லாஹ் உன்னை நேசிப்பான். மனிதர்களிடம் உள்ள பொருட்களை ஆசைப்படாமல் பற்றற்று வாழ், மக்கள் உன்னை நேசிப்பார்கள்”
( ابن ماجه : 4102)
ஒற்றுமையை, மனித நல்லிணக்கத்தையும் நாம் சம்பாதிக்க இருக்கிறோம் எனவே அதற்காக தாராளமாக செலவு செய்யுங்கள். அன்பை ஏற்படுத்தும் காரியங்களை ஆர்வமுடன் செயல்படுத்துங்கள். அன்பால் ஒன்றினையும் சமூகத்திற்கே ஏற்றம் ஏற்படும். ஷரீஅத் அனுமதித்த காரியங்களை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆர்வம் காட்டுங்கள். அதனடிப்படையில் யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள். காழ்புணர்ச்சி கொண்டு விமர்சனம் செய்யாதீர்கள். மாமறை கூறும் வசனத்தை கேளுங்கள் 49:11.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ
“நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்”

சபையில் சிரிப்பலையை ஏற்படுத்துவதற்காக ஒருவர் மனம் புண்படி அவரை பற்றி விமர்சனம் செய்வது கூடவே கூடாது. தவறுகளை பகிரங்க படுத்தி அவருடைய சுயமரியாதையை சீர்குலைக்க வேண்டாம். இதனை நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்:
وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ
“கூட்டத்தினரிடம் சிரிப்பை ஏற்படுத்துவதற்காக பேசும் போது பொய்யை வெளிப்படுத்துபவருக்கு வைலுன் என்கிற கேடு உண்டாகட்டும். அவருக்கு வைலுன் உண்டாகட்டும். அவருக்கு வைலுன் உண்டாகட்டும்”( أبو داود : 4990)

அல்லாஹ்வுடைய அடியார்களே! இந்த எச்சரிக்கை வன்மையான எச்சரிக்கை, எனவே மிக சுலபமாக கருதிக் கொள்ளவேண்டாம். நமது சொல், செயல், எதன் மூலமும் நாம் அடுத்தவரின் சுயமரியாதைக்கு இழிவு ஏற்படுத்தக் கூடாது. மேலும் இதனை பற்றி கடுமையாக எச்சரிப்பதில் பின் வரும் இறைவசனம் உறுதியாக இருக்கிறது.(24:19)
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
“எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக் கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்”

கவனமாக கேளுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! அவனுக்கு அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சி நடங்கள். அவனுடைய பொறுத்ததை பெறுவதற்கு ஆர்வம் கொள்ளுங்கள். நமது சமூக ஒற்றுமைக்கும், தனிமனித கௌரவத்திற்கும், தனது கிருபைகளை பொழியும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே இருங்கள்.

நமது தேசத்து ஆட்சியாளர்கள் நம்மை உரிய முறையில் நேசிக்கிறார்கள். நமது நலனில் முழு அக்கறை செலுத்துகிறார்கள்.
خِيَارُ أَئِمَّتِكُمْ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ
“உங்கள் தலைவர்களில் மிக சிறந்தவர்கள் (யார் எனில்) அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள், உங்களை அவர்கள் நேசிப்பார்கள். அவர்கள் உங்களுக்காக துஆச் செய்வார்கள், நீங்கள் அவர்களுக்காக துஆச் செய்வீர்கள்”( مسلم : 3447)
இந்த கிருபை கிடைத்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். நமக்குள் ஒற்றுமை ஏற்படுவதற்கும், நமது உள்ளங்களில் அன்பு வளர்வதற்கும், நமது இல்லங்களில் பாசப்பிணைப்பு ஏற்படுவதற்கும், நமது குடும்ப உறவுகளில் அக்கறையும், நேசமும் வளர்வதற்கும், வல்ல அல்லாஹ்விடம் உதவி தேடுவோம். மனகசப்பும், காழ்ப்புணர்ச்சி மூலம் நமக்கிடையில் பிரிவினை ஏற்படுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம். பின் வரும் திருமறை வசனத்தை எப்போது நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.(8:46)
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ
“அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள், அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும்.”

யா அல்லாஹ்! உனக்கும், உனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்களுக்கும், நீ யாரையெல்லாம் பின்பற்றி நடக்க சொன்னாயோ அவர்களுக்கும் நாங்கள் முழுமையாக வழிபடுவதற்கு எங்கள் அனைவருக்கும் உதவி புரிவாயாக!!

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (4:59)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُم
“ஈமான்கொண்ட நல்லடியார்களே ! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்”

அல்லாஹ்வின் நல்லடியார்களே! வல்ல அல்லாஹ் நபி மீது ஸலவாத் சொல்லும் செயலை தன்னிடமிருந்தே தொடங்கி, அதில் மலக்குமார்களையும் சேர்த்து உண்மை முமின்களாகிய நம்மையும் சொல்லச்சொல்கிறான் : (33:56)
إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
“இந்த நபியின் மீது அல்லாஹ் (ஸலவாத் ஓதி) அருள்புரிகிறான். மலக்குகளும் அவருக்காக (ஸலவாத்ஓதி) அருளைதேடுகிறார்கள். மூமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்”
« مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْراً»
இறைதூதர் ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்லுகிறார்களோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்லுகிறான்" (முஸ்லிம் : 384 )

"யா அல்லாஹ் ! எங்கள் தலைவரும், எங்கள் நபியுமாகிய முஹம்மதுநபி ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்கள் மீதும், புனிதமிக்க அவர்களின் குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த அவர்களின் தோழர்கள் மீதும் ஸலவாத் என்னும் ஈடேற்றத்தையும் ஸலாம் என்னும் அமைதியையும், பரகத் என்னும் நற்பாக்கியங்களையும் தந்தருள்வாயாக!, மேலும் நல்வழி காட்டும் கலிபாக்களாகிய அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களையும், சங்கை நிறைந்த அனைத்து தோழர்களையும், அவர்களை தொடர்ந்து வந்த தாபியீன்களையும், உலக முடிவு நாள் வரை இவர்களை அழகிய முறையில் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களாகிய எங்கள் அனைவரையும் நீ பொருந்திக்கொள்வாயாக.!!!"

யா அல்லாஹ்! மறைவாகவும் பகிரங்கமாகவும் நடக்கும் குழப்பத்திலிருந்து இந்த அமீரக தேசத்தை பாதுகாப்பாயாக!! அனைத்து இஸ்லாமிய தேசங்களிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!!(இந்த துஆவை இமாம் இரண்டு முறை ஓத வேண்டும்)

யா அல்லாஹ்! எங்கள் நோன்பையும், தொழுகையையும் ஏற்றுக் கொள்வாயாக!! நாங்கள் உன்னிடம் சொர்கத்தை கேட்கிறோம், சொல்லாலும் செயலாலும் அந்த சொர்கத்தின் பக்கம் நெருங்கும் பாக்கியத்தை உன்னிடம் கேட்கிறோம்!!! நரகிலிருந்து பாதுகாப்பு கேட்கிறோம்!

யா அல்லாஹ்! நாங்கள் நற்காரியங்கள் புரிவதற்கு உதவி செய்வாயாக!! கீழ்த்தரமான செயல்களை நாங்கள் விடுவதற்கும் எங்களுக்கு அருள் புரிவாயாக!!! இறைநம்பிக்கையை எங்களுக்கு பிரியம் உள்ளதாக ஆக்கிவைப்பாயாக!!! மேலும் அதனை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக வைப்பாயாக!!! இறைவனுக்கு நன்றி மறப்பதையும், பாவங்கள் செய்வதையும், தவறுகள் செய்வதையும் எங்களுக்கு வெறுப்பிற்குரியதாக்கி வைப்பாயாக!! எங்கள் இறைவா ! நாங்கள் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், கற்பையும், போதுமென்ற மனதையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! எங்களுக்கு உண்மையை உண்மையாகவே காட்டுவாயாக! அதனை பின்பற்றும் பாக்கியத்தையும் காட்டுவாயாக!!! தீமையை தீமையாக காட்டுவாயாக! அதனை விட்டு நாங்கள் தவிர்ந்து விடுவதற்கும் நீ உதவி புரிவாயாக!!! எங்கள் மனைவி மக்களுக்கு நீ பரக்கத்து செய்வாயாக!!!

யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் பலன்தரக்கூடிய கல்வியை கேட்கிறோம், மேலும் அஞ்சி நடக்கும் உள்ளத்தையும், எப்போது திக்ர் செய்யும் நாவையும், விசாலமான உயர்தரமான ரிஸ்கையும், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நல் அமல்களையும், உடலில் ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்திலும் குழந்தை செல்வத்திலும் பரக்கத்தையும், நாங்கள் உன்னிடம் மன்றாடி கேட்கிறோம்.

யா அல்லாஹ்! எங்களுக்கு பலன் தரக்கூடியவற்றை எங்களுக்கு கற்றுத் தருவாயாக, நீ கற்று தந்ததை எங்களுக்கு பலனுள்ளதாக ஆக்கி வைப்பாயாக, எங்களுக்கு அறிவு ஞானத்தை அதிகப் படுத்துவாயாக!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களுக்கு இறை அச்சத்தை தருவாயாக, மேலும் அதை நீ தூய்மைப் படுத்துவாயாக நீயே அதனை தூய்மைப் படுத்துவதில் சிறந்தவனாக இருக்கிறாய்!
யா அல்லாஹ்! நீயே அதற்கு பொறுப்பாளனாகவும், எஜமானனாகவும் இருக்கிறாய், எங்கள் அனைத்து காரியங்களின் இறுதி முடிவை அழகாக்கி வைப்பாயாக,

யா அல்லாஹ்! எங்கள் எண்ணங்களை சீர்படுத்துவாயாக, எங்கள் மனைவிமார்களிலும், சந்ததியிலும் நீ எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக, மேலும் அவர்களை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக ஆக்குவாயாக!
எங்கள் நண்பர்களுக்கு உதவி புரிவாயாக! எங்கள் அந்தஸ்துகளை உயர்த்தி விடுவாயாக, எங்கள் நன்மைகளை அதிகப் படுத்துவாயாக, எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக!

யா அல்லாஹ்! எங்கள் அனைத்து பாவத்தையும் மன்னித்துவிடுவாயாக, எங்கள் அனைத்து கவலைகளையும் போக்கி விடுவாயாக, கடன்களை நிவர்த்தி செய்துவிடுவாயாக, நோயாளிகளை குணப்படுத்திவிடுவாயாக, தேவைகளை மேன்மையாக்கி விடுவாயாக மேலும் நிறைவேற்றி விடுவாயாக.

அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து பக்குவப்படுத்தும் நாயனே! எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!
                   
யா அல்லாஹ்! அமீரக தேசத்தின் எங்கள் தலைவர், எங்கள் காரியங்களின் மன்னர் ஷைகு கலீபாவையும் மற்றும் அவரது பிரதிநிதியையும், நீ நேசித்தவாறு பொருந்திக்கொண்டவாறு உதவி புரிவாயாக! மேலும் அவரது சகோதரர்களை அமீரகத்தின் நடுவர்களாக நிலைப்படுத்துவாயாக !! உயிரோடு உள்ள மற்றும் மரணித்த முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் நீ மன்னிப்பை வழங்கிடுவாயாக!!!                       
யா அல்லாஹ்! ஷைகுஜாயிது, ஷைகு மக்தூம், உனது கிருபையில் வந்தடைந்த அமீரகத்தின் மன்னர்களாகிய இவர்களது சகோதரர்கள், ஆகிய அனைவருக்கும் உனது கிருபையை பொழிவாயாக!!!

யா அல்லாஹ் !  இந்த அமீரகத்திலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!

மகத்தான அல்லாஹ்வை நினைவு கூறுங்கள், அவன் உங்களை நினைவு கூறுகிறான், மேலும் அவன் நமக்கு செய்த நிஃமத்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவன் அதனை உங்களுக்கு மேலும் அதிகப்படுத்துவான். தொழுகையை நிலைநாட்டுங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).


மொழிபெயர்ப்பு
மௌலவி, அப்சலுள் உலமா
செய்யிது அபூஸாலிஹ் பிலாலி B.Com., DUBAI.
Contact No. +971529919346
Email : abusalih100@gmail.com


You may also like

No comments:

Powered by Blogger.