அமீரக ஜும்மா குத்பா பேருரை - 4th October 2013

/
0 Comments
தலைப்பு:
துல்ஹஜ் பிறை முதல் பத்து நாட்களின் சிறப்புகள்!

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். நற்காரியங்கள் புரிவதற்கு தனது அடியார்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் தரும் அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும். அடியார்கள் செய்யும் நல்அமல்களுக்கு நன்மைகளை வாரி வழங்குகிறான். பரிசுத்த நாயனான அவனை உரிய முறையில் புகழ்கிறேன். மேலும் எங்கள் திருநபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த தோழர்கள் அனைவர் மீதும், உலக முடிவு நாள் வரை அழகிய முறையில் அந்த தோழர்களை பின்பற்றி நடக்கும் முஸ்லிம்கள் மீதும் இறைவா நீ ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவாயாக!!!
கவனமாக கேளுங்கள்! இறைவனுக்கு அஞ்சி நடப்பதை எனக்கும் உங்களுக்கும் உபதேசிக்கிறேன்.
வல்ல அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:(39:10)
قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ
“(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நம்பிக்கை கொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும்”
முஸ்லிம்களே!! இறைவன் இந்த மனித குலத்திற்கு செய்த மாபெரும் கிருபையும், அளவற்ற சலுகையும் என்னவென்றால், நல்அமல்கள் செய்வதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளான். அந்த அமல்களை செய்வதின் மூலம் அந்த அடியார்களுக்கு வாழ்வில் நிம்மதியையும், நற்பாக்கியங்களையும் வாரி வழங்குகிறான். அப்படி நமது நற்காரியங்களை பெருக்கிக் கொள்வதற்காகத்தான் இறைவன் சில குறிப்பிட்ட நேரங்களையும், நாட்களையும், காலங்களையும் மிகவும் வலியுறுத்தி கூறுகிறான். இறைவன் குறிப்பிட்டுள்ள காலங்களில் நாம் அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அதிகமாக வணக்கம் புரிந்தும், நன்றிகள் கூறியும் நாம் அவனிடம் நெருங்க வேண்டும். காரணம் அப்படி நாம் செய்தால் நமது நன்மைகளை இறைவன் இரட்டிப்பாக்கி தருகிறான். நமது நிலையும் உயரும்.
இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
أَفْضَلُ أَيَّامِ الدُّنْيَا أَيَّامُ الْعَشْر
“இவ்வுலக வாழ்வின் நாட்களில் மிகவும் சிறப்பான நாட்கள் (இந்த) பத்து நாட்களே ஆகும்” ( أخرجه البزار، وقال الهيثمى في مجمع الزوائد (4/17) : رجاله ثقات)
மேற்படி வந்துள்ள ஹதீஸில் வரும் “பத்து நாட்கள்” என்பது துல்ஹஜ் பிறையின் முதல் பத்து நாட்களை குறிக்கும். இங்கு குறிப்பிடப்படும் இந்த பத்து நாட்களுக்கு எண்ணற்ற சிறப்பியல்புகள் இருப்பதால்தான் அல்லாஹ் இந்த நாட்கள் கூறிக்காட்டி அதன் மீது சத்தியம் செய்கிறான்.
அல்லாஹ் தனது மறையில் கூறுகிறான்:(89:1- 5)
وَالْفَجْرِ * وَلَيالٍ عَشْرٍ* وَالشَّفْعِ وَالْوَتْرِ* وَاللَّيْلِ إِذَا يَسْرِ* هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ
“விடியற்காலையின் மீதும், பத்து இரவுகளின் மீதும், ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், நிகழ்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்). இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கின்றது”
இறைவன் சத்தியம் செய்வதிலிருந்தே இந்த நாட்களின் சிறப்புகளை நான் விளங்கிக்கொள்ளலாம். தொழுகை, நோன்பு, ஹஜ், தானதர்மங்கள் போன்ற பல நற்காரியங்களின் தாயகமாக திகழ்வதால்தான் அந்த நாட்களுக்கு இப்பேற்பட்ட சிறப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட இந்த நாட்களில் அதிகமாக வணக்கங்கள் புரிந்து இறைவனுடன் நெருங்க வேண்டும் என்று இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் நம்மை ஆர்வமூட்டுகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ- يَعْنِي أَيَّامَ الْعَشْرِ
“வேறு எந்த நாட்களில் செய்யப்படும் நற்காரியங்களை விட இந்த நாட்களில் செய்யப்படும் நற்காரியங்களே அல்லாஹ்விற்கு மிக பிரியமானதாக இருக்கிறது. அதாவது துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்” (الترمذي : 757)
சயீது இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் பின் வருமாறு மக்களுக்கு சொல்லிவந்துள்ளார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளரும் இந்த சஹாபியே. “இந்த பத்து நாட்களில் உங்கள் விளக்குகளை அணைக்காதீர்கள்” அதாவது துல்ஹஜ் பிறையின் முதல் பத்து நாட்களில் இரவு முழுவதும் அமல் செய்வதற்காகவும், தஹஜ்ஜது தொழுவதற்காகவும் வசதியாக நீங்கள் விளக்குகளை அணைக்கவேண்டாம் என்று மறைமுகமாக கூறியுள்ளார்கள்.( فتح الباري لابن رجب 7/54)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
افْعَلُوا الْخَيْرَ دَهْرَكُمْ، وَتَعَرَّضُوا لِنَفَحَاتِ رَحْمَةِ اللَّهِ، فَإِنَّ لِلَّهِ نَفَحَاتٍ مِنْ رَحْمَتِهِ يُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ
“உங்கள் காலம் முழுவதும் நற்காரியங்கள் செய்து கொண்டே இருங்கள். அல்லாஹ்வின் அருள் நிறைந்த வெகுமதிக்காக காத்திருங்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்விடம் அருள் நிறைந்த வெகுமதிகள் உள்ளன. தனது அடியார்களில் யாரை நாடுகிறானோ அவருக்கு அவற்றை வழங்குகிறான்” (الطبراني في الكبير 1/250)
இந்த நாட்களில் செய்யவேண்டிய அமல்களில் ஏற்றமான அமல் நோன்பு பிடிப்பது. இதனை பற்றி ஹதீஸில் வந்துள்ளது. “துல்ஹஜ் பிறையின் ஒன்பதாவது பிறையில் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வழமையாக நோன்பு வைத்துள்ளார்கள்....” (أبو داود : 2437) எனவேதான் பெரும்பான்மையான உலமாக்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை ஏற்றமான செயல் என்று வலியுறுத்தி கூறுகிறார்கள். கடமையான காரியங்களை நிறைவேற்றி விட்டாலும் அதற்கு பிறகு உபரியாக அதிகப்படியான அமல்களை செய்வதின் மூலம் இந்த நாட்களில் ஒரு அடியான் இறைவனிடம் நெருங்கி விட முடியும்.  அந்த படிப்பினையை பின்வரும் ஹதீஸ் நமக்கு தருகிறது.
وَمَا تَقَرَّبَ إِلَىَّ عَبْدِي بِشَىْءٍ أَحَبَّ إِلَىَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَىَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியார் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியார் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பார். இறுதியில் அவரை நேசித்துவிடும்போது அவர் கேட்கிற செவியாக, அவர் பார்க்கிற கண்ணாக, அவர் பற்றுகிற கையாக, அவர் நடக்கிற காலாக நான் ஆகி விடுவேன். அவர் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவர் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவரோ மரணத்தை வெறுக்கிறார். நானும் (மரணத்தின் மூலம்) அவருக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். (البخاري : 6502)
எனவே ஒரு முஸ்லிம் தனது பாவங்களுக்கு மன்னிப்பு தேடி இறைவனிடம் மன்றாடுவதற்கும், அதிகமாக நல்அமல்கள் செய்வதற்கும் இந்த நாட்களில் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். தொடர் வணக்கங்கள் மூலம் நமது தவறுகள் மன்னிக்கப்பட்டு, நமது நிலை உயரும். அதிகமாக குர்ஆன் ஓதுவது, தாய்தந்தையாருக்கு பணிவிடை செய்வது, உறவுகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, தானதர்மங்கள், அதிகப்படியான தஸ்பீஹ் போன்றவை எல்லாம் மிகச்சிறந்த நற்காரியங்களாகும்.
பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:(22:28)
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ
“...(அந்த) குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் திருப்பெயரை திக்ர் செய்வார்கள்...”
மேல் கூறிய வசனத்தில் வரும் “அந்த குறிப்பிட்ட நாட்கள்” என்பது துல்ஹஜ் பிறையின் முதல் பத்து நாட்களை குறிக்கும்.
எனவே இந்த நாட்களில் இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து தொடர்ந்து காலையிலும், மாலையிலும் அவனை திக்ரு செய்து அந்த சிந்தனையிலே தனது உள்ளத்தை ஆக்கிவிட முயற்சி செய்பவனுக்கு பாராட்டுகள் நிச்சயம் உண்டு. சுன்னத்தான முறையில் இறைவனை திக்ர் செய்வதை பின் வரும் ஹதீஸில் விளங்கிக்கொள்ளவேண்டும்.
مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ 
“இந்த பத்து நாட்களில் செய்யப்படும் அமலைக் காட்டிலும் வேறு எந்த நாட்களில் செய்யப்படும் அமலும் அல்லாஹ்விற்கு மிகப் பிரமாண்டமானதாகவும், பிரியமுள்ளதாகவும் இல்லை. எனவே இந்த நாட்களில் நீங்கள் அதிகமாக கலிமா சொல்லுங்கள், தக்பீர் சொல்லுங்கள், மற்றும் அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள்”( أحمد : 5575)
பிறிதொரு ஹதீஸில் பின்வருமாறு வருகிறது:
مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزاً مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِىَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ
“யார் (பின் வருமாறு)....
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை உரிமை விட்டதற்கு நிகரான நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும், அவருடைய நூறு பாவங்கள் மன்னிக்கப்படும், பொழுது சாயும் வரை அந்த நாள் முழுதும் ஷைத்தானிடமிருந்து அவருக்கு சிறந்த பாதுகாப்பு அரணாக அமையும், இவரைவிட அதிகமாக ஓதியவரை தவிர வேறு எவரும் இவருக்கு நிகராக மறுமைநாளில் நற்காரியங்களை கொண்டுவரமாட்டார்” (متفق عليه) 
முஃமீன்களே! எப்போதும் அல்லாஹ்வை திக்ர் செய்யவேண்டும் என்று நமக்கு இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மெய்யாகவே கற்றுத்தந்துள்ளார்கள். எனவே காலையிலும் மாலையிலும், தூக்கத்திலும் விழிப்பிலும், பணியில் இருக்கும்போதும் ஓய்வில் இருக்கும்போதும், ஆரோக்கியமாக இருக்கும்போதும் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போதும், நமது வீடுகளிலும் வீதிகளிலும், ஓரிடத்தில் இருந்தாலும் அல்லது பயணத்தில் இருந்தாலும், உண்ணும்போதும் பருகும்போதும்,  நாம் இறைவனை திக்ர் செய்து கொண்டே இருக்கவேண்டும். இதன் மூலம் நமது பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். தவறுகளை அழித்துவிடுகிறான்.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
“யார் சாப்பிடும்போது, ‘எனக்கு இந்த உணவை அளித்தானே அந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும், எனது எந்த அசைவும் இன்றி எந்த ஆற்றலும் இன்றி எனக்கு இந்த உணவை வழங்கினானே அவனுக்கே புகழ் அனைத்தும்” என்று யார் சொல்கிறாரோ அவருடைய முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. யார் ஒரு ஆடையை அணிய முற்படும்போது, ‘எனது எந்த அசைவும் இன்றியும், எனது எந்த ஆற்றல் இன்றியும் இந்த உடையை எனக்கு அணிவித்தானே அவனுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறுகிறாரோ, அவருடைய முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.( أبو داود : 4023)
கவனமாக கேளுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! அவனுக்கு அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சி நடங்கள். அவன் நம்மை பகிரங்கமாகவும், கமுக்கமாகவும் கண்காணிக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். யார் குர்பானி குடுக்க நாடுகிறாரோ இந்த துல்ஹஜ் பிறை பிறந்தது முதல் நகம், முடிகளை வெட்டவதை தவிர்க்க வேண்டும். அப்படி இருப்பது மிக ஏற்றமான செயல்.
ஒரு முறை இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
إِذَا دَخَلَتِ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّىَ فَلاَ يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئاً
“துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் தொடங்கும் போது உங்களில் யாராவது குர்பானி குடுக்க நாடியிருந்தால், தனது நகங்களையோ, முடியையோ வெட்ட வேண்டாம்”( مسلم : 1977)
குர்பானி குடுப்பவர் அவசியமின்றி நகம் முடிகளை களைவது வெறுப்பான செயல் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஹதீஸ் அதனை தவிர்க்கசொல்லி வலியுறுத்துகிறது, என்று உலமாக்கள் விளக்கம் தருகிறார்கள். எனவே மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் நகம் முடிகளை தாராளமாக வெட்டிக்கொள்ளலாம், அதனால் எந்த குற்றமும் ஏற்படாது என்றும் உலமாக்கள் விளக்கம் தருகிறார்கள்.
யா அல்லாஹ்! உனக்கும், உனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்களுக்கும், நீ யாரையெல்லாம் பின்பற்றி நடக்க சொன்னாயோ அவர்களுக்கும் நாங்கள் முழுமையாக வழிபடுவதற்கு எங்கள் அனைவருக்கும் உதவி புரிவாயாக!!
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (4:59)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُم
“ஈமான்கொண்ட நல்லடியார்களே ! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்”
அல்லாஹ்வின் நல்லடியார்களே! வல்ல அல்லாஹ் நபி மீது ஸலவாத் சொல்லும் செயலை தன்னிடமிருந்தே தொடங்கி, அதில் மலக்குமார்களையும் சேர்த்து உண்மை முமின்களாகிய நம்மையும் சொல்லச்சொல்கிறான் : (33:56)
إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
“இந்த நபியின் மீது அல்லாஹ் (ஸலவாத் ஓதி) அருள்புரிகிறான். மலக்குகளும் அவருக்காக (ஸலவாத்ஓதி) அருளைதேடுகிறார்கள். மூமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்”
« مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْراً»
இறைதூதர் ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்லுகிறார்களோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்லுகிறான்" (முஸ்லிம் : 384 )
"யா அல்லாஹ் ! எங்கள் தலைவரும், எங்கள் நபியுமாகிய முஹம்மதுநபி ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்கள் மீதும், புனிதமிக்க அவர்களின் குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த அவர்களின் தோழர்கள் மீதும் ஸலவாத் என்னும் ஈடேற்றத்தையும் ஸலாம் என்னும் அமைதியையும், பரகத் என்னும் நற்பாக்கியங்களையும் தந்தருள்வாயாக!, மேலும் நல்வழி காட்டும் கலிபாக்களாகிய அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களையும், சங்கை நிறைந்த அனைத்து தோழர்களையும், அவர்களை தொடர்ந்து வந்த தாபியீன்களையும், உலக முடிவு நாள் வரை இவர்களை அழகிய முறையில் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களாகிய எங்கள் அனைவரையும் நீ பொருந்திக்கொள்வாயாக.!!!"
யா அல்லாஹ்! மறைவாகவும் பகிரங்கமாகவும் நடக்கும் குழப்பத்திலிருந்து இந்த அமீரக தேசத்தை பாதுகாப்பாயாக!! அனைத்து இஸ்லாமிய தேசங்களிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!!(இந்த துஆவை இமாம் இரண்டு முறை ஓத வேண்டும்)
யா அல்லாஹ்! எங்கள் நோன்பையும், தொழுகையையும் ஏற்றுக் கொள்வாயாக!! நாங்கள் உன்னிடம் சொர்கத்தை கேட்கிறோம், சொல்லாலும் செயலாலும் அந்த சொர்கத்தின் பக்கம் நெருங்கும் பாக்கியத்தை உன்னிடம் கேட்கிறோம்!!! நரகிலிருந்து பாதுகாப்பு கேட்கிறோம்!
யா அல்லாஹ்! நாங்கள் நற்காரியங்கள் புரிவதற்கு உதவி செய்வாயாக!! கீழ்த்தரமான செயல்களை நாங்கள் விடுவதற்கும் எங்களுக்கு அருள் புரிவாயாக!!! இறைநம்பிக்கையை எங்களுக்கு பிரியம் உள்ளதாக ஆக்கிவைப்பாயாக!!! மேலும் அதனை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக வைப்பாயாக!!! இறைவனுக்கு நன்றி மறப்பதையும், பாவங்கள் செய்வதையும், தவறுகள் செய்வதையும் எங்களுக்கு வெறுப்பிற்குரியதாக்கி வைப்பாயாக!! எங்கள் இறைவா ! நாங்கள் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், கற்பையும், போதுமென்ற மனதையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்! எங்களுக்கு உண்மையை உண்மையாகவே காட்டுவாயாக! அதனை பின்பற்றும் பாக்கியத்தையும் காட்டுவாயாக!!! தீமையை தீமையாக காட்டுவாயாக! அதனை விட்டு நாங்கள் தவிர்ந்து விடுவதற்கும் நீ உதவி புரிவாயாக!!! எங்கள் மனைவி மக்களுக்கு நீ பரக்கத்து செய்வாயாக!!!
யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் பலன்தரக்கூடிய கல்வியை கேட்கிறோம், மேலும் அஞ்சி நடக்கும் உள்ளத்தையும், எப்போது திக்ர் செய்யும் நாவையும், விசாலமான உயர்தரமான ரிஸ்கையும், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நல் அமல்களையும், உடலில் ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்திலும் குழந்தை செல்வத்திலும் பரக்கத்தையும், நாங்கள் உன்னிடம் மன்றாடி கேட்கிறோம்.
யா அல்லாஹ்! எங்களுக்கு பலன் தரக்கூடியவற்றை எங்களுக்கு கற்றுத் தருவாயாக, நீ கற்று தந்ததை எங்களுக்கு பலனுள்ளதாக ஆக்கி வைப்பாயாக, எங்களுக்கு அறிவு ஞானத்தை அதிகப் படுத்துவாயாக!
யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களுக்கு இறை அச்சத்தை தருவாயாக, மேலும் அதை நீ தூய்மைப் படுத்துவாயாக நீயே அதனை தூய்மைப் படுத்துவதில் சிறந்தவனாக இருக்கிறாய்!
யா அல்லாஹ்! நீயே அதற்கு பொறுப்பாளனாகவும், எஜமானனாகவும் இருக்கிறாய், எங்கள் அனைத்து காரியங்களின் இறுதி முடிவை அழகாக்கி வைப்பாயாக,
யா அல்லாஹ்! எங்கள் எண்ணங்களை சீர்படுத்துவாயாக, எங்கள் மனைவிமார்களிலும், சந்ததியிலும் நீ எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக, மேலும் அவர்களை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக ஆக்குவாயாக!
எங்கள் நண்பர்களுக்கு உதவி புரிவாயாக! எங்கள் அந்தஸ்துகளை உயர்த்தி விடுவாயாக, எங்கள் நன்மைகளை அதிகப் படுத்துவாயாக, எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக!
யா அல்லாஹ்! எங்கள் அனைத்து பாவத்தையும் மன்னித்துவிடுவாயாக, எங்கள் அனைத்து கவலைகளையும் போக்கி விடுவாயாக, கடன்களை நிவர்த்தி செய்துவிடுவாயாக, நோயாளிகளை குணப்படுத்திவிடுவாயாக, தேவைகளை மேன்மையாக்கி விடுவாயாக மேலும் நிறைவேற்றி விடுவாயாக.
அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து பக்குவப்படுத்தும் நாயனே! எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!
                   
யா அல்லாஹ்! அமீரக தேசத்தின் எங்கள் தலைவர், எங்கள் காரியங்களின் மன்னர் ஷைகு கலீபாவையும் மற்றும் அவரது பிரதிநிதியையும், நீ நேசித்தவாறு பொருந்திக்கொண்டவாறு உதவி புரிவாயாக! மேலும் அவரது சகோதரர்களை அமீரகத்தின் நடுவர்களாக நிலைப்படுத்துவாயாக !! உயிரோடு உள்ள மற்றும் மரணித்த முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் நீ மன்னிப்பை வழங்கிடுவாயாக!!!                       
யா அல்லாஹ்! ஷைகுஜாயிது, ஷைகு மக்தூம், உனது கிருபையில் வந்தடைந்த அமீரகத்தின் மன்னர்களாகிய இவர்களது சகோதரர்கள், ஆகிய அனைவருக்கும் உனது கிருபையை பொழிவாயாக!!!
யா அல்லாஹ் !  இந்த அமீரகத்திலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!
மகத்தான அல்லாஹ்வை நினைவு கூறுங்கள், அவன் உங்களை நினைவு கூறுகிறான், மேலும் அவன் நமக்கு செய்த நிஃமத்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவன் அதனை உங்களுக்கு மேலும் அதிகப்படுத்துவான். தொழுகையை நிலைநாட்டுங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).
மொழிபெயர்ப்பு
மௌலவி, அப்சலுள் உலமா
செய்யிது அபூஸாலிஹ் பிலாலி B.Com., DUBAI.
Contact No. +971529919346
Email : abusalih100@gmail.com


You may also like

No comments:

Powered by Blogger.