சூனியமும் ஜோதிடமும் (Witchcraft And Horoscope) - இஸ்லாம் கூறுவதென்ன? - 01

/
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

தற்காலத்தில் புரியாத புதிராக உள்ள தலைப்பு தான் " சூனியம், ஜோதிடம்" , இதை பற்றி நான் என் சொந்த கருத்தை கூறுவதைவிட அரபு மொழியில் உலக புகழ்பெற்ற அறிஞர் அப்துல் அஜீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) எழுதிய நூலை என் ஆசிரியர் E.A ஃபஸ்லுர் ரஹ்மான் உமரி M.A அவர்கள் தமிழாக்கம் செய்த நூல் "சூனியமும் ஜோதிடமும் - இஸ்லாம் கூறுவதென்ன?" . இதை நம் சகோதரர்களுக்கு ஓர் சிறு தொடராக எழுதுகிறேன்.

பிஸ்மில்லாஹ்- அல்லாஹ்வின் திருபெயரால் தொடங்குகிறேன்

சூனியமும் ஜோதிடமும் - இஸ்லாம் கூறுவதென்ன?

முன்னுரை:
ஸிஹ்ர் (السحر) சூனியம் என்பது ஓர் அரபிச் சொல்லாகும். இது பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

(1) மந்திர - மாயங்கள் செய்தல்! பாவச்செயல்களின் மூலம் ஷைத்தானுக்குப் பூஜைகள் செய்து அவனது உதவியுடன் சில மந்திரங்களைச் செய்வதை இது குறிக்கும். மந்திரர்கள், இவ்வகை சூனியத்தைப் பயன்படுத்தி மக்களில் சிலரைச் சிலர் மீது வழமைக்கு அதிகக் கோபமோ அன்போ கொள்ளச் செய்வதை நாம் காணலாம்.

(2) இதிலேயே இன்னொறொரு வகை உண்டு. அதாவது, மனிதர்களின் உருவங்களையும் குணங்களையும் இந்த மந்திரவாதிகள் மாற்றிக் காண்பிப்பார்கள். இதன் மூலம் ஒருவனின் உள்ளத்தில் குறிப்பிட்ட மனிதன் மீது அச்சத்தை ஏற்படுத்துவார்கள். அல்லது அவன் பால் அதிக அளவு மையல் கொள்ளச்செய்வார்கள்! , இந்த தொழில் செய்வோர் இதற்கென சில உபாயங்களையும் அசுத்தமான ஷைத்தானிய பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள். கணவன் மனைவிக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவது இந்த வகைகளைச் சேர்ந்ததே.

இதுபோன்ற செயல்கள் அனைத்தும் அழிவில் ஆழ்த்தும் பெரும்பாவச் செயல்களாகும் என்று ஒரு நபிமொழி இவ்வாறு எச்சரிக்கை செய்கிறது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: " அழிவிலாழ்த்தும் ஏழுபாவங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்! அவை என்ன? என்று நபியவர்கள் சொன்னார்கள், ஷிர்க் (இறைவனுக்கு இணைவைத்து வணங்குவது), சூனியம் செய்வது, கொலை செய்வது, வட்டிஉண்பது, அநாதையின் சொத்தை உண்பது, யுத்தக்களத்தில் புறமுதுகிட்டு ஓடுவது, இறைவிசுவாசமுள்ள - பத்தினித்தனமான, அப்பாவிப் பெண்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துவது ஆகியவை ஆகும்
(நூல்- புகாரி, முஸ்லிம்)

(3) மூன்றாவது வகை, மாயாஜால - கண்கட்டி வித்தை! இதற்கு எந்த அடிப்படையும் இருக்காது. ஆனால் மந்திரவாதிகள் பார்ப்போரின் கண்களைக் கட்டிப்போட்டு, நிகழாததை நிகழ்வது போன்று காட்டி ஏமாற்றுவார்கள்!.

(4), நான்காவது வகை, அகராதிப் பொருளை பயன்படுத்துவதாகும், அறிவைக் கவரக்கூடிய அழகான, நுட்பமான ஒவ்வொன்றுக்கும் சூனியமெனும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. "சொற்பொழிவில் ஒருவகையான சூனியம் உள்ளது" என்று ஓர் அரபி பழமொழி சொல்கிறது. நபிமொழியிலும் இவ்வாசகம் இடம் பெற்றிருப்பதாக சில அறிவிப்புகள் வந்துள்ளன!, இது அகராதியின் அடிப்படையிலான சொற்பிரயோகமே தவிர வேறொன்றும் இல்லை!

அல் கஹானா (ﺍﻟﻜﻬﺎﻧﺔ) என்றால் ஜோதிடம் பார்ப்பது, குறிசொல்வது என்று பொருள். மந்திரவாதிகள், எதிர்காலத்தில் இப்படி இப்படியெல்லம் நடக்கும் என்று பொய்களை அள்ளி வீசுவார்கள். அவர்கள் சொல்வதை நம்புவது குஃப்ர் எனும் இறைநிராகரிப்பு ஆகும். இதற்கான ஆதாரங்கள் இத்தொடரில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று பாமர மக்களின் சிந்தையை அதிக அளவில் குழப்பிக்கொண்டிருக்கும் சமாச்சாரம் இவைகள்தான்! சூனியம் செய்வது, ஜோசியம் பார்ப்பது, அதனை நம்பி தகிடு - தாயத்துகள் முடிந்து கட்டிக்கொள்வது ஆகியவைதான்! இவை மக்களை அதிக அளவில் வழிகேட்டில் சிக்க வைத்துள்ள - குழப்பமான பிரச்சனைகள், இவற்றின் கேடுகளை விளக்கிக் காட்டுவதும் இவற்றின் குழப்பங்களில் இருந்து விடுபடும் வழிமுறைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்திக் கொடுப்பதும் சீர்திருத்த நோக்குடைய அனைவரின் கடமையாகும்.

ஏனெனில் இன்றைக்கு முஸ்லிம்கள் சிலர் அறியாமையினால் சூனியக்காரர்களையும், மந்திரவாதிகளையும் நாடிச்செல் செல்கிறார்கள்!. சூனியத்தின் பிடியில்- அதன் வழிகேட்டில் சிக்குண்டு ஈமானை (தௌஹீத்)
எனும் ஏக இறைவிசுவாசத்தை இழந்து வருகிறார்கள். சூனியம் செய்து பிழைப்பு நடத்தும் மந்திரவாதிகள் மக்களை மேலும்மேலும் குழப்பத்தில் ஆழ்த்துவதற்காகவும், வழிகெடுப்பதற்காகவும் சூது செய்வதும் சூழ்ச்சி வலை பின்னுவதும் சமுதாயத்தில் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது!

அதனால் மக்கள் தீன்- இறைமார்க்கத்தின் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் விலகிச் செல்லத் தலைப்படுவதையும் சமூகத்தில் பல்வேறு தீமைகளும் வழிகேடுகளும் பல்கிப் பெருவதையும் தடுத்தாக வேண்டும்.

மேலும் தீய எண்ணம் கொண்ட சிலர் முஸ்லிம் சகோதரர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களுக்குக் கேடுவிளை விப்பதற்காக இந்த மந்திரவாதிகளை அணுகுகிறார்கள். சில அற்பக்காசுகளைப் பெற்றுக்கொண்டு அவர்கள் சொல்வதுபடி சூனியம்-ஜோதிடம் பார்த்துக்கொள்ள கொடுக்கிறார்கள். இந்த மந்திரவாதிகள்! அதனால் பாதிப்புக்குள்ளாகும் சாமானிய மக்களின் அல்லலும் அவதியும் அளவிட முடியாதது! ஆனால் அவற்றைக் கண்டு அகமகிழ்கிறார்கள் இந்த மந்திரவாதிகளும் அவர்களைக் கூலிக்கு அமர்த்திய - பொறாமைக் குணமுடைய தீயவர்களும்!

ஷரீயத்தைக் கற்றறிந்த அறிஞர்கள் சூனியத்தின் தீமை குறிப்பு மக்களைக் கடுமையாக எச்சரிக்கை செய்யவேண்டும்., மேலும் அத்தகைய மந்திர - மாயங்களால் ஏதேனும் தீமைகள் ஏற்படலாமென அஞ்சும் மக்களுக்கு அவற்றிலிருந்து விடுபட ஷரீஅத்தில் அனுமதிக்எப்பட்டுள்ள வழிமுறைகளையும் விளக்கிக் கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் பாமர மக்கள் இந்த மந்திரவாதிகளை நாடிச்செல்லும் அவல நிலை அடியோடு மாறும்!

இந்தவகையில் மேன்மைமிகு ஷைக் இப்னு பாஸ்(ரஹ்) அவர்கள் எழுதிய இந்த நூல் (தொடர்) பயன் மிக்கது. இதை தமிழில் மொழிபெயர்த்து தந்தவர் ஹாபிஸ் E.A.ஃபஸ்லுர் ரஹ்மான் உமரி அவர்கள், அவர்களுக்கு உதவிய K.J.மஸ்தான் அலீசா பாகவி அவர்கள்! அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

இத்தொடரைப் படிக்கும் சகோதரர்கள் சூனியம்-ஜோதிடத்தின் தீமைகள் குறித்து தாங்களும் தெளிவடைந்து பிற மக்களையும் விழிப்படையச் செய்திடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் நம் நற்செயல்களை அனைத்தையும் ஏற்று அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக!.


               بسم الله الرحمن ﺍﻟﺮﺣﻴﻢ
அளவிலாக் கருணையும் நிகரிலா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாதும் ஸலாமும் இறுதி நபி மீது உண்டாவதாக!

இன்றைய காலகட்டத்தில், மருத்துவம் செய்வதாகக் கூறிக் கொண்டு சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை செய்யக் கூடிய மந்திரவாதிகள் பெருகிவிட்டனர். சிலநாடுகளில் இவர்கள் ஆங்காங்கே பரவியுள்ளனர்., அறியாமைக்கு ஆளாகியுள்ள சாமானிய மக்களை ஏமாற்றுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் நலன் நாடுதல் என்கிற ரீதியில்-
               இத்தகைய போக்கில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பேராபத்து உள்ளதென்பதைத் தெளிவாக விளக்கிட நாடினேன். ஏனெனில், இதனால் - அல்லாஹ் அல்லாதவர்களுடன் மக்கள் தொடர்புகொள்கிற - அவர்களும் காரணகாரியத்திற்கு அப்பாலிருந்து நிவாரணம் அளிப்பவர்களே என்று நம்புகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது! மேலும் இந்தப்போக்கில் அல்லாஹ் - ரஸூலுடைய கட்டளைகளுக்கு மாறுசெய்வதும் உள்ளது!

இது குறித்து - அல்லாஹ்வின் உதவியை நாடியவனாக நான் கூறுவது இதுதான்:

நோய்க்கு சிகிச்சை பெறுவது ஆகுமான ஒன்றே என்பது ஏகோபித்த கருத்தாகும். எனவே முஸ்லிம்கள் சிறந்த மருத்துவரிடம் செல்லவேண்டும். அதாவது, உடல் உட்பிரிவு நோய்களிலும், அறுவைச் சிகிச்சையிலும், நரம்பு நோய்கள் ஆகியவற்றிலும் திறமைபெற்ற மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு என்ன நோய் என்பதை அவர் உறுதிப் படுத்திக் கொண்டு, பொருத்தமான - ஷரிஅத்தில் அனுமதியுள்ள மருந்துகளின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அவர் கற்றுத் தேரிய மருத்துவத் திறமைக்கு ஏற்ப மருத்துவம் செய்வார்.

இதற்கு அனுமதி உண்டு. ஏனெனில், இது சாநாரணமாக நடைமுறையிலுள்ள, காரண - காரியங்களுக்குட்பட்ட ஒன்றுதான்.
மேலும் தவக்குல் (இறைவனையே முழுவதும் சார்ந்திருத்தல்) எனும் பண்புக்கு இது முரணானதல்ல. மேலும் அல்லாஹ், (இவ்வுலக வாழ்வில்) சில நோய்களைக் கொடுத்துள்ளானெனில் அவற்றிற்கான மருந்தையும் வழங்கியே இருக்கிறான். இதனை அறிந்தவர், அறிந்தார்! அறியாதார்,அறியாது போனார்!. ஆனால் அல்லாஹ், என்னென்ன பொருட்களை அடியார்கள் மீது ஹராம் - விலக்கப்பட்டவையாக ஆக்கினானோ அவற்றில் அவர்களுடைய நிவாரணத்தை வைக்கவில்லை!

எனவே நோயாளிகள் சூனியக்காரரிடம், ஜோசியக்காரர்களிடம் செல்வது கூடாது., மறைவானவற்றை அறிவதாக வாதிடக்கூடிய இத்தகையவர்களிடம் தங்களுடைய நோய்களைத் தெரிந்து கொள்ளலாமெனச் செல்வது கூடாது. மேலும் அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை உண்மையென ஏற்றுக் கொள்வதும் கூடாது!

ஏனெனில் அவர்கள் விஷயங்களை இட்டிக்கட்டி - யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்களே தவிர வேறில்லை! மேலும் தங்களது நோக்கம் நிறை வேறுவதற்காக உதவிவேண்டி ஜின்களை அழைக்கிறார்கள் எனில் இவர்கள், இல்முல் ஃகைப் எனும் மறைவான உண்மைகளை அறிவதாக வாதிடுகிறார்களெனில் இவர்கள் குஃப்ர் என்னும் இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் உள்ளனர் என்பதே இவர்களைப் பற்றிய சட்ட நிலையாகும்!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

من أتي عرافا فسأله عن شيء لم تقبل له صلاة أربعين ليلة - مسلم .

"ஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது"
நூல் : முஸ்லிம் ஹிதீஸ்-2230

அபுஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;

من أتي كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل علي محمد .

"யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) ஜோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத் (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்"
நூல்-அபூதாவூத், ஹதிஸ்-3904

இமாம் ஹாகிம் அவர்கள் பின்வருமாறு அறிவித்து அதனை ஸஹீஹ் தரத்திலானது என்றும் கூறியுள்ளார்கள்;

من أتي عرافا او كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل علي محمد - رواه الحاكم

" நட்சத்திரம் பார்த்துக் குறிசொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத்(ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்"
நூல்-ஹாகிம் பாகம்1-8

மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:

 قال رسول الله: ليس منا من تطير او تطير له تكهن او تكهن له او سحر له
ومن اتي كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل علي محمد - رواه بزار باسناد جيد

" ஒருவர் சகுனம் பார்ப்பாரெனில் அல்லது அவருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதெனில் ஒருவர் ஜோசியம் சொல்வாரெனில் அல்லது அவருக்காக ஜோசியம் சொல்லப்படுகிறதெனில் ஒருவர் சூனியம் செய்தாரெனில் அல்லது அவருக்காக சூனியம் செய்யப்படுகிறதெனில் - இப்படிப்பட்டவர்கள் நம்மைச் சேர்ந்தோர் அல்லர். ஒருவர் ஜோசியக்காரனிடம் வந்து அவன் சொல்வதை நம்புகிறாரெனில் திண்ணமாக அவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் மீது இறக்கி யருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்தவர் ஆவார்"
(நூல்- பஜ்ஜார்)

இந்தநபிமொழிகளில் - குறிசொல்பவர்கள், அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது!

ஆட்சியாளர்கள், அதிகாரத்திலுள்ளவர்கள், தீன் இறைமார்க்க விவகாரங்களைக் கண்காணிப்பவர்கள், ஏனைய பொறுப்பாளர்கள் ஆகியோரின் கடமையாதெனில், குறிசொல்பவர் களிடமோ, ஜோதிடர்களிடமோ மக்கள் செல்வதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இத்தகைய தொழில் செய்வோர் தெருக்களுக்கோ, கடைவீதிகளுக்கோ வராமலிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த மந்திரவாதிகள் சொல்வது, சிலவிஷயங்களில் சரியாக இருப்பதை வைத்துக்கொண்டும் இவர்களிடம் வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை வைத்துக்கொண்டும் ஏமாந்து விடக்கூடாது. ஏனெனில் இவர்களிடம் வருவோர் அறியாதவர்களாவர்!.

இவர்களிடம் செல்வதையும் விளக்கம் கேட்பதையும் இவர்கள் சொல்வதை உண்மைப்படுத்துவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்பதே நமக்கு பெரும் ஆதாரமாகும். மட்டுமல்ல, அப்படிச் செல்வதில் பெரும் தீமையும் பேராபத்தும் உள்ளன. மோசமான பின்விளைவுகளும் அதிலுண்டு!.

ஜோதிடர்களும் மந்திரவாதிகளும் இறைநிராகரிப்பவர்களே என்பதற்கு - மேற்சொன்ன நபிமொழிகளில் தெளிவான ஆதாரம் உள்ளது. ஏனெனில் இவர்கள் மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடுகிறார்கள். அப்படி வாதிடுவது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். மேலும் இவர்கள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஜின்களைப் பூஜிக்கிறார்கள். அப்படி செய்வது ஷிர்க்-இணைவைப்பும், குஃப்ர் -நிராகரிப்பும் ஆகும்.

மறைவான விஷயங்களை அறிவதாக வாதிடக் கூடிய இவர்களை யார் உண்மைப்படுத்துகிறாரோ அவரும் இவர்களை போன்று நிராகரிப்பவரே ஆவார்.

மேலும் இந்தத் தொழிலைச் செய்வோரிடம் சென்று யார்யார் மந்திரத்தையும் ஜோசியத்தையும் கற்றார்களோ அவர்களை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விலகிவிட்டார்கள். எந்தவிதத்திலும் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.

இந்த மந்திவாதிகள் சொல்கிற சிகிச்சை முறையை நம்புவது முஸ்லிம்களுக்குக் கூடாது. உதாரணமாக, இவர்களது மந்திரி முனங்கலையும், மந்திரித்துக் கோடுகள் கிழிப்பது, தகடு எழுதுவதும், அதனை தாயத்தில் கட்டிக் கொடுப்பது போன்ற இவர்களது வீணான செயல்களையும் நம்புவதும் அதன்படி செயல்படுவதும் முஸ்லிம்களுக்குக் கூடாது. ஏனெனில் இவை எல்லாம் ஜோசியம் பார்ப்பது போன்றதுதான், மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் காரியங்கள் தாம்! இந்த மந்திரவாதிகளின் வழிகேட்டிற்கும் குஃப்ர் எனும் நிராகரிப்புக்கும் துணைபோனவர்களே ஆவர்!.

மேலும் எந்த முஸ்லிமும் இந்த மந்திரவாதிகளிடம் சென்று - தன் மகனுக்கு அல்லது உறவினருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? என்று கேட்பதோ கணவன் - மனைவிக்கு மத்தியில் அன்பும் நட்பும் தோன்றுமா? அல்லது பிரிவும் பகைமையும் ஏற்படுமா? என்று கேட்பதோ கூடாது. ஏனெனில் இவையாவும் ஃகைப் எனும் மறைவான காரியங்களாகும்., இவற்றை அறிவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது!.

சூனியமும் மந்திரமும் குஃப்ர் எனும் நிராகரிப்புப் போக்கைச் சேர்ந்தவையும்- தடைசெய்யப்பட்ட தீமைகளைச் சேர்ந்தவையுமாகும்.

அல்பகரா அத்தியாயத்தில் ஹாரூத், மாரூத் எனும் இருமலக்குகளின் விஷயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று;

ۚوَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَة

ٌ فَلَا تَكْفُرْ ۖفَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْن

َ الْمَرْءِ وَزَوْجِهِ ۚوَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا

بِإِذْنِ اللَّهِ ۚوَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚوَلَقَدْ

عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ

ۚوَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚلَوْ كَانُوا يَعْلَمُونَ.

 ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
(அல்குர்ஆன்- 2:102)

இத்திருமறை வசனம் பின்வரும் விஷயங்களை தெளிவு படுத்துகிறது:

# சூனியம் குஃப்ர் எனும் இறைநிராகரிப்பாகும், சூனியம் செய்பவர்கள் கணவன் - மனைவிக்கிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள்.

# சூனியம் செய்வது, சுயமாக எவ்விதப் பயனையும், தீங்கையும் ஏற்படுத்தக்கூடியதல்ல. மாறாக இவ்வுலக நியதியிலான - விதியின் அடிப்படையிலான இறைநாட்டத்தைத் கொண்டுதான் எதையும் அது நிகழ்த்த முடியும். ஏனெனில் அல்லாஹ்தான் நன்மை- தீமைகளைப் படைத்தவன்.

- மேலும் கற்பனைகளை இட்டுக் கட்டக்கூடிய இந்த மந்திரவாதிகளால் தீமைகள் பெருகிவிட்டன., அபாயங்கள் கடுமையாகி விட்டன! இவர்கள், இத்தகைய விஷயங்களை, சிலைவணங்கிகளிடம் இருந்து கற்றுக்கொண்டு வந்து, அறிவு நிலையில் பலவீனமாக உள்ள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள்!.
" இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிஊன், ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல். (திண்ணமாக நாம் அனைவரும், அல்லாஹ்வுக்கே உரியவர்கள், மேலும் திண்ணமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாய் இருக்கிறோம். அல்லாஹ் நமக்குப் போதுமானவன், பொறுப்பேற்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்)

# சூனியத்தைக் கற்றுக்கொள்ளக்கூடியவர்கள், தங்களுக்கு எவ்விதப்பயனும் அளிக்காத, மாறாக தீங்கு அளிக்ககூடியதையே கற்றுக்கொள்கிறார்கள்.

# இவ்வுலகிலும் சரி, மறுவுலகிலும் சரி அவர்களுக்குக் கடுமையான நஷ்டம் உண்டென்று அறிவிக்ககூடிய பெரிய எச்சரிக்கையும் இந்த வசனத்தில் உண்டு.

# இத்தகையவர்கள் தங்களது உயிரை (அதாவது உழைப்பை யும், சக்தியையும்) மிகவும் மோசமான விலைக்கு விற்று விட்டார்கள். இதனால் தான் அல்லாஹ் இந்தவசனத்தில் அவர்களுடைய வியாபாரத்தை மிகவும் இகழ்ந்து கூறியுள்ளான். தங்களுடைய உயிரை விற்று அவர்கள் வாங்கிக்கொண்ட பொருள் எத்துணை கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக்கூடாதா?...

தொடரும்..........



You may also like

No comments:

Powered by Blogger.