அமீரக ஜும்மா குத்பா பேருரை - 27th September 2013

/
0 Comments

தலைப்பு:
சங்கைமிகு குர்ஆன்

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். சங்கை நிறைந்த திருக்குர்ஆனை இறக்கிவைத்துள்ளான். அந்த வேதம் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாகவும், நற்செய்தி சொல்வதாகவும் அமைந்துள்ளது. அந்த வேதத்தில் முஃமீன்களுக்கு நிவாரணத்தையும், கிருபைகளையும் வைத்துள்ளான். மேலும் எங்கள் திருநபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் புனிதமிக்க குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த தோழர்கள் அனைவர் மீதும், உலக முடிவு நாள் வரை அழகிய முறையில் அந்த தோழர்களை பின்பற்றி நடக்கும் முஸ்லிம்கள் மீதும் இறைவா நீ ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவாயாக!!!

கவனமாக கேளுங்கள்! இறைவனுக்கு அஞ்சி நடப்பதை எனக்கும் உங்களுக்கும் உபதேசிக்கிறேன்.

வல்ல அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:(04:131)
وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الكِتَابَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ
 உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:(39:17-18)
فَبِشِّرْ عِبَادِ* الَّذِينَ يَسْتَمِعُونَ القَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ
ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்.

முஃமீன்களே! நிச்சயமாக இறைவனின் வேதம் அழகிய செய்திகளை சொல்கிறது. அதனை தனது இறுதித்தூதர் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறக்கி வைத்துள்ளான். 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:(26:192-195)
وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ* نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ* عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ* بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார். (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) தெளிவான அரபி மொழியில். (இதனை இறக்கி வைத்தான்).


மேலும் அல்லாஹ் கூறுகிறான்:(41:41-42)
وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ* لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ
 ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும். அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

இந்த திருவேதத்தை பல அழகிய பெயர்களில் அழைக்கிறான். பல சிறப்பு தன்மைகளை சொல்லி இந்த வேதத்தை புகழ்கிறான். இந்த வேதம் இறைவனின் உறுதியான வழி. மதிநுட்பங்கள் நிறைந்த சிந்தனை புதையல். எண்ணங்களை ஒருங்கிணைக்கும் புனித நூல். உலமாக்களின் கல்வி தாகத்தை அதிகப்படுத்தும் புனிதமறை இது. பலனுள்ள நிவாரணத்தை தரக்கூடியது. உறுதியான தீர்வை தரவல்லது. இதனை உறுதியாக பற்றிபிடித்துக் கொண்டவருக்கு பெரும் ஈடேற்றம் கிடைக்கும். பின்பற்றி நடப்பவருக்கு நிலையான வெற்றி கிட்டும். இதன்படி வாழ்வில் நடப்பவருக்கு நேர்வழியாக அமையும். 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:(17:9)
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது;

திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ
“நான் உங்களிடம் இரு விசயங்களை விட்டுச்செல்கிறேன். அவை இரண்டையும் நீங்கள் பற்றி பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். ஒன்று இறைவேதம், மற்றொன்று இறைதூதரின் வழிமுறை” (موطأ مالك : 1625)

எனவே திருக்குர்ஆனை நாம் பற்றி பிடிக்கவேண்டும் என்கிற அடிப்படையில் அதனை நாம் மனனம் செய்யவேண்டும், அதிகமாக ஓதவேண்டும். அழகிய முறையில் எழுத்து உச்சரிப்புகளுடன் தினசரி ஓத வேண்டும். அது வலியுறுத்தும் கருத்துகளை ஏற்று நடந்து நமது அன்றாட வாழ்வில் செயல்படுத்தவேண்டும். இந்த வேதத்தை நாமும் கற்று பிறருக்கும் அதனை கற்றுக் கொடுக்கவேண்டும். 

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
“இந்த குர்ஆனை தானும் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறாரோ அவரே உங்களில் மிக சிறந்தவர்” (البخاري : 5027)

அல்லாஹ்வுடைய நல்லடியார்களே! இந்த சங்கைமிக்க திருக்குர்ஆனை நாம் உறுதியாக பற்றிப் பிடிப்பதால் எண்ணற்ற பலன் கிடைக்கும். வாழ்வில் சிறந்த முறையில் வாழ்வதற்கும் அதன் மூலம் மறுமை வாழ்விற்கு நன்மை சேர்ப்பதற்கும் வழிவகுக்கும். இந்த வேதத்தை சிறந்த முறையில் ஓதி வருபவருக்கு அதன் பரக்கத்து கண்டிப்பாக கிடைக்கும். அதன் நன்மைகள் பல மடங்கு கிடைக்கும்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ، وَلَامٌ حَرْفٌ، وَمِيمٌ حَرْفٌ
“இறைவனின் வேதத்தில் யார் ஒரே ஓர் எழுத்தை ஒதுகிறாரோ, அவருக்கு அதற்குரிய நன்மை கிடைக்கும். அந்த நன்மை பத்து மடங்காக இருக்கும். (எனவே) அலீப் லாம் மீம் என்பதை நான் ஒரு எழுத்தாக கருதமாட்டேன். ஆனால் அலீப் என்பது ஒரு எழுத்து, லாம் என்பது ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து” (الترمذي : 2910)

நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا
“குர்ஆனின் தோழருக்கு* (மறுமை நாளில்) சொல்லப்படும், “நீர் ஓதும், மேலும் மேலும் பதவி உயர்வு பெற்றுக்கொள். உலக வாழ்வில் அழகிய முறையில் நீர் ஓதியது போல் இப்போது ஓதுவீராக! ஏனெனில் ஒவ்வொரு வசனத்தையும் நீ ஓதும் போது அதன் முடிவில் உனது பதவிகள் உயர்ந்து கொண்டேயிருக்கும்” (الترمذي : 2914)

*குர்ஆனின் தோழர் என்றால் வழமையாக குர்ஆனை ஓதி அதன் படி வாழ்வில் நடப்பவர் என்று பொருள்படும்.

முஸ்லிம்களே! குர்ஆனை பற்றிப்பிடிப்பது என்றால் அதனை நமது வாழ்வில் நடைமுறை படுத்த வேண்டும் என்று பொருள். அழகிய முறையில் மிக துல்லியமாக ஓத வேண்டும். அதனை உளப்பூர்வமாக பின்பற்றி நடக்க வேண்டும். வசனங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஆர்வம் கொள்ளவேண்டும். அது வலியுறுத்தி வரும் ஹலால் ஹராம்களை பேணி நடக்க வேண்டும். அமானித பொருட்களை அதற்கு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்பந்தங்களை சரி வர நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு வசனத்தையும் சீரிய முறையில் சிந்தித்து பார்க்கவேண்டும். அதன்மூலம் விளங்கும் நற்குணங்களை பேணி நடக்கவேண்டும். இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய குணாதிசயம் பற்றி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “அவர்களுடைய குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று சொன்னார்கள்.

உலமாக்கள் இந்த ஹதீஸிற்கு பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்: இதன் பொருள் அந்த வேதத்தின் படி அமல் செய்வதாகும். அதன் சட்டங்களை பேணி நடப்பது. அதன் ஒழுக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பது. அதன் உதாரணங்களையும், சம்பவங்களையும் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும். அழகிய வடிவில் உரிய முறையில் ஓதி வரவேண்டும். (شرح النووي على مسلم 3/86)
குர்ஆனை உறுதியாக பற்றி பிடிப்பதின் மூலம் குடும்ப உறவில் சிறந்த முன்னேற்றம் ஏற்படுகிறது. வாழ்வில் சுபிட்சம் ஏற்படுகிறது. வாழ்வின் எல்லா நலவும் கிடைக்கும். அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் பின் வருமாறு கூறியுள்ளார்கள்: எந்த வீட்டில் இறைவனின் வேதம் வழமையாக ஓதப்பட்டு வருகிறதோ அவர்களுடைய வீட்டில் செல்வம் பெருகும், நன்மைகள் அதிகமாக கிடைக்கும், மலக்குமார்கள் உடனிருப்பார்கள், ஷைத்தான்கள் விரண்டு ஓடிவிடுவார்கள். ஆனால் எந்த வீட்டில் இறைவனின் வேதம் ஓதப்படவில்லையோ அவர்களுடைய குடும்பத்தினருக்கிடையில் மனநெருக்கடி ஏற்படும், நன்மைகள் குறைந்து விடும், ஷைத்தான்கள் உடனிருப்பார்கள். (مصنف ابن أبي شيبة 10/487)

குர்ஆனுடன் தனது உள்ளத்தை வாழ்நாள் முழுவதும் நெருக்கி வைத்துக்கொண்டவருக்கே பாராட்டுகள் அனைத்தும். அவருக்கு நிம்மதியும், மனஅமைதியும் கிடைக்கும். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக இந்த குர்ஆன், இறைவனின் ஒழுக்க குவியல்கள். எனவே அவற்றை எந்த அளவிற்கு உங்களால் எடுத்து நடக்க முடியுமோ, எடுத்து நடங்கள். ஏனெனில் குர்ஆன் ஓதப்படாத எந்த வீட்டிலும் நன்மை இருப்பதாக என்னால் கருதமுடியவில்லை. எந்த உள்ளத்தில் இறைவேதத்தின் எந்த வசனமும் இல்லையோ அது யாரும் குடியிருக்காத பாழடைந்த வீட்டைப் போன்று அவருடைய உள்ளம் இருக்கும். (الدارمي : 3370)

எனவே நமது வீடுகளில் அதிகமாக குர்ஆன் ஓதுவதற்கு ஆசைப்படுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்துங்கள். யார் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த குர்ஆனை கற்றுக் கொடுக்கிறாரோ மறுமை நாளில் அவருடைய தலையில் இறைவனின் ஒளி நிரம்பிய ஒரு கிரீடம் சூட்டப்படும். 

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
مَن قَرَأَ الْقُرآنَ وَتَعَلَّمَهُ وَعَمِلَ بِهِ أُلْبِسَ يَوْمَ القيامة تَاجَاً مِنْ نُورٍ ضَوْؤُهُ مِثْلُ ضَوْءِ الشَّمْسِ ويكسى وَاْلِدَيْهِ حُلَّتَانِ لاَ تُقَوَّمُ بِهِمَا الدُّنْيَا، فَيَقُولاَنِ: بِمَ كسينا ؟ فَيُقَاْلُ: بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرآنَ  
“யார் குர்ஆனை ஓதி அதனை நன்றாக கற்றுக்கொண்டாரோ, பின்னர் அதன்படி செயல்படுத்துகிராரோ, நாளை மறுமை நாளில் ஒளி நிறைந்த ஒரு கீரிடம் அவருக்கு சூட்டப்படும். அந்த கீரிடத்தின் ஒளி சூரிய ஒளி போன்று இருக்கும். இந்த உலகில் இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அழகிய ஆடை அணிகலன்கள் அவருடைய பெற்றோருக்கு அணிவிக்கப்படும். உடனே அந்த பெற்றோர்கள், “எதற்கு நாங்கள் இப்படி அணிவிக்கப்படுகிறோம்?” என்று கேட்பார்கள். “உங்களுடைய குழந்தை குர்ஆனை உறுதியாக எடுத்துக் கொண்டதால்” என்று அவர்களுக்கு பதில் சொல்லப்படும்.”( المستدرك 1/567)

இந்த வேதத்தில் சிறந்த நிவாரணம் இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். 

அல்லாஹ் கூறுகிறான்:(17:82)
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்;

மேல்குறிப்பிட்ட வசனத்திற்கு பின்வருமாறு விரிவுரையாளர்கள் விளக்கம் தருகிறார்கள். அனைத்து விதமான சந்தேகத்திலிருந்தும், மன ஊசலாட்டத்திலிருந்தும் விடுபடுவதற்காக இந்த குர்ஆனில் நேர்வழியும், நிவாரணமும் உள்ளது. (تفسير القرطبي 15/369) ஒரு முஃமீன் குர்ஆன் ஓதுவதை கேட்டால் அவனுக்கு மிகுந்த பலனை தரும். அனைத்து விதமான ஊசலாட்டத்திலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளிடமிருந்தும் சிறந்த நிவாரணம் கிடைக்கும். 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:(39:23)
اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُتَشَابِهًا مَثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ اللَّهِ
அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன

திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ شَفِيعاً لأَصْحَابِهِ
“நீங்கள் குர்ஆனை (வழமையாக) ஓதி வாருங்கள். நாளை மறுமை நாளில் அதனை ஒதிவருபவருக்கு பரிந்துரை செய்யும்” (مسلم : 804)

கவனமாக கேளுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! அவனுக்கு அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சி நடங்கள். அவன் நம்மை பகிரங்கமாகவும், கமுக்கமாகவும் கண்காணிக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَمَثَلُ الَّذِي يَقْرَأُ وَهُوَ يَتَعَاهَدُهُ وَهُوَ عَلَيْهِ شَدِيدٌ فَلَهُ أَجْرَانِ

யா அல்லாஹ்! உனக்கும், உனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், நீ யாரையெல்லாம் பின்பற்றி நடக்க சொன்னாயோ அவர்களுக்கும் நாங்கள் முழுமையாக வழிபடுவதற்கு எங்கள் அனைவருக்கும் உதவி புரிவாயாக!!

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (4:59)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُم
“ஈமான்கொண்ட நல்லடியார்களே ! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்”

அல்லாஹ்வின் நல்லடியார்களே! வல்ல அல்லாஹ் நபி மீது ஸலவாத் சொல்லும் செயலை தன்னிடமிருந்தே தொடங்கி, அதில் மலக்குமார்களையும் சேர்த்து உண்மை முமின்களாகிய நம்மையும் சொல்லச்சொல்கிறான் : (33:56)
إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
“இந்த நபியின் மீது அல்லாஹ் (ஸலவாத் ஓதி) அருள்புரிகிறான். மலக்குகளும் அவருக்காக (ஸலவாத்ஓதி) அருளைதேடுகிறார்கள். மூமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்”
« مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْراً»
இறைதூதர் (ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் "யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்லுகிறார்களோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்லுகிறான்" (முஸ்லிம் : 384 )

"யா அல்லாஹ் ! எங்கள் தலைவரும், எங்கள் நபியுமாகிய முஹம்மதுநபி (ஸல்) அவர்கள் மீதும், புனிதமிக்க அவர்களின் குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த அவர்களின் தோழர்கள் மீதும் ஸலவாத் என்னும் ஈடேற்றத்தையும் ஸலாம் என்னும் அமைதியையும், பரகத் என்னும் நற்பாக்கியங்களையும் தந்தருள்வாயாக!, மேலும் நல்வழி காட்டும் கலிபாக்களாகிய அபூபக்ர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோர்களையும், சங்கை நிறைந்த அனைத்து தோழர்களையும், அவர்களை தொடர்ந்து வந்த தாபியீன்களையும், உலக முடிவு நாள் வரை இவர்களை அழகிய முறையில் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களாகிய எங்கள் அனைவரையும் நீ பொருந்திக்கொள்வாயாக.!!!"

யா அல்லாஹ்! மறைவாகவும் பகிரங்கமாகவும் நடக்கும் குழப்பத்திலிருந்து இந்த அமீரக தேசத்தை பாதுகாப்பாயாக!! அனைத்து இஸ்லாமிய தேசங்களிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!!

யா அல்லாஹ்! எங்கள் நோன்பையும், தொழுகையையும் ஏற்றுக் கொள்வாயாக!! நாங்கள் உன்னிடம் சொர்கத்தை கேட்கிறோம், சொல்லாலும் செயலாலும் அந்த சொர்கத்தின் பக்கம் நெருங்கும் பாக்கியத்தை உன்னிடம் கேட்கிறோம்!!! நரகிலிருந்து பாதுகாப்பு கேட்கிறோம்!

யா அல்லாஹ்! நாங்கள் நற்காரியங்கள் புரிவதற்கு உதவி செய்வாயாக!! கீழ்த்தரமான செயல்களை நாங்கள் விடுவதற்கும் எங்களுக்கு அருள் புரிவாயாக!!! இறைநம்பிக்கையை எங்களுக்கு பிரியம் உள்ளதாக ஆக்கிவைப்பாயாக!!! மேலும் அதனை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக வைப்பாயாக!!! இறைவனுக்கு நன்றி மறப்பதையும், பாவங்கள் செய்வதையும், தவறுகள் செய்வதையும் எங்களுக்கு வெறுப்பிற்குரியதாக்கி வைப்பாயாக!! எங்கள் இறைவா ! நாங்கள் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், கற்பையும், போதுமென்ற மனதையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! எங்களுக்கு உண்மையை உண்மையாகவே காட்டுவாயாக! அதனை பின்பற்றும் பாக்கியத்தையும் காட்டுவாயாக!!! தீமையை தீமையாக காட்டுவாயாக! அதனை விட்டு நாங்கள் தவிர்ந்து விடுவதற்கும் நீ உதவி புரிவாயாக!!! எங்கள் மனைவி மக்களுக்கு நீ பரக்கத்து செய்வாயாக!!! 

யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் பலன்தரக்கூடிய கல்வியை கேட்கிறோம், மேலும் அஞ்சி நடக்கும் உள்ளத்தையும், எப்போது திக்ர் செய்யும் நாவையும், விசாலமான உயர்தரமான ரிஸ்கையும், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நல் அமல்களையும், உடலில் ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்திலும் குழந்தை செல்வத்திலும் பரக்கத்தையும், நாங்கள் உன்னிடம் மன்றாடி கேட்கிறோம். 

யா அல்லாஹ்! எங்களுக்கு பலன் தரக்கூடியவற்றை எங்களுக்கு கற்றுத் தருவாயாக, நீ கற்று தந்ததை எங்களுக்கு பலனுள்ளதாக ஆக்கி வைப்பாயாக, எங்களுக்கு அறிவு ஞானத்தை அதிகப் படுத்துவாயாக!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களுக்கு இறை அச்சத்தை தருவாயாக, மேலும் அதை நீ தூய்மைப் படுத்துவாயாக நீயே அதனை தூய்மைப் படுத்துவதில் சிறந்தவனாக இருக்கிறாய்! 
யா அல்லாஹ்! நீயே அதற்கு பொறுப்பாளனாகவும், எஜமானனாகவும் இருக்கிறாய், எங்கள் அனைத்து காரியங்களின் இறுதி முடிவை அழகாக்கி வைப்பாயாக, 

யா அல்லாஹ்! எங்கள் எண்ணங்களை சீர்படுத்துவாயாக, எங்கள் மனைவிமார்களிலும், சந்ததியிலும் நீ எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக, மேலும் அவர்களை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக ஆக்குவாயாக!
எங்கள் நண்பர்களுக்கு உதவி புரிவாயாக! எங்கள் அந்தஸ்துகளை உயர்த்தி விடுவாயாக, எங்கள் நன்மைகளை அதிகப் படுத்துவாயாக, எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக! 

யா அல்லாஹ்! எங்கள் அனைத்து பாவத்தையும் மன்னித்துவிடுவாயாக, எங்கள் அனைத்து கவலைகளையும் போக்கி விடுவாயாக, கடன்களை நிவர்த்தி செய்துவிடுவாயாக, நோயாளிகளை குணப்படுத்திவிடுவாயாக, தேவைகளை மேன்மையாக்கி விடுவாயாக மேலும் நிறைவேற்றி விடுவாயாக. 

அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து பக்குவப்படுத்தும் நாயனே! எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!
                    
யா அல்லாஹ்! அமீரக தேசத்தின் எங்கள் தலைவர், எங்கள் காரியங்களின் மன்னர் ஷைகு கலீபாவையும் மற்றும் அவரது பிரதிநிதியையும், நீ நேசித்தவாறு பொருந்திக்கொண்டவாறு உதவி புரிவாயாக! மேலும் அவரது சகோதரர்களை அமீரகத்தின் நடுவர்களாக நிலைப்படுத்துவாயாக !! உயிரோடு உள்ள மற்றும் மரணித்த முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் நீ மன்னிப்பை வழங்கிடுவாயாக!!!                        
யா அல்லாஹ்! ஷைகுஜாயிது, ஷைகு மக்தூம், உனது கிருபையில் வந்தடைந்த அமீரகத்தின் மன்னர்களாகிய இவர்களது சகோதரர்கள், ஆகிய அனைவருக்கும் உனது கிருபையை பொழிவாயாக!!!

யா அல்லாஹ் ! இந்த அமீரகத்திலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!

மகத்தான அல்லாஹ்வை நினைவு கூறுங்கள், அவன் உங்களை நினைவு கூறுகிறான், மேலும் அவன் நமக்கு செய்த நிஃமத்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவன் அதனை உங்களுக்கு மேலும் அதிகப்படுத்துவான். தொழுகையை நிலைநாட்டுங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).
I


You may also like

No comments:

Powered by Blogger.