அமீரக - ஜும்மா குத்பா பேருரை 20th September 2013

/
0 Comments
தலைப்பு:
அல்லாஹ் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றான்.


             எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமியில் உள்ளவற்றை நன்றாக அறிகிறான். அனைத்து காரியங்களையும் அவனே அறிகிறான். பரிசுத்த நாயனான அவனை உரிய முறையில் புகழ்கிறேன். மேலும் எங்கள் திருநபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் புனிதமிக்க குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த தோழர்கள் அனைவர் மீதும், உலக முடிவு நாள் வரை அழகிய முறையில் அந்த தோழர்களை பின்பற்றி நடக்கும் முஸ்லிம்கள் மீதும் இறைவா நீ ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவாயாக!!!
கவனமாக கேளுங்கள்! இறைவனுக்கு அஞ்சி நடப்பதை எனக்கும் உங்களுக்கும் உபதேசிக்கிறேன்.
வல்ல அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:(59:18)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.”
முஸ்லிம்களே!! இந்த துன்யா வாழ்க்கை ஒரு சோதனை கூடம், கவலைகள், தொந்தரவுகள், கஷ்டங்கள் நிறைந்தது.
அல்லாஹ் தனது மறையில் கூறுகிறான்:(90:4)
لَقَدْ خَلَقْنَا الإِنسَانَ فِي كَبَدٍ
“மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கினவனாகவே படைத்திருக்கின்றோம்”
அதாவது இந்த மனிதன் துன்யாவில் தனது வாழ்நாள் முழுதும் கஷ்டங்களிலும், மன நெருக்கடியிலும், பிரச்சனைகளிலும், கடும் தொல்லைகளிலுமே உழன்று கொண்டிருக்கிறான். பிரச்சனைகளில் மூழ்கியவன் பிறகு அதிலிருந்து விடுபடும் போது நிம்மதி பெருமூச்சு விடுகிறான். ஆனாலும் அந்த நிம்மதி வெகுநேரம் தொடர்வதில்லை. துன்யாவின் இன்பங்கள் உடனடியாக விலகக்கூடியதாகவே உள்ளது.
பின் வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்:(3:185)
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
“இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை”
இந்த உலக இன்பம் தனக்கு தொடர்ந்து நிலையாக அமைந்துவிடும் என்று மனிதன் மனக்கணக்கு போடும்போதே இந்த உலக இன்பம் சட்டென்று அவனை ஏமாற்றிவிட்டு மறைந்து விடுகிறது. இவ்வுலக இன்பம் வாடிவிடக்கூடிய ஒரு மலரே, எந்நேரமும் அகலக்கூடிய தற்காலிக இன்பமே. இவ்வுலகத்தில் எதுவுமே நிலையாக இருப்பதில்லை.
பரிசுத்த நாயன் கூறுவதை கேளுங்கள்:(55:26-27)
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ* وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلالِ وَالإكْرَامِ
“பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்”
இந்த உண்மையை விளங்கிக்கொண்ட மனிதன் இவ்வுலக வாழ்கையை நிலையற்றதாக கருதிக்கொள்வான். எனவே அல்லாஹ்வுடைய அமானிதங்களை பேணி நடப்பான். மறுமைக்கான வழிகளை ஆராய்ந்து அதன்படி நடப்பான்.
அல்லாஹ் தனது சத்திய வேதத்தில் கூறுகிறான்:(42:36)
وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى لِلَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
“தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர் களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவைகளோ மிக்க மேலானவைகளும், நிலையானவைகளுமாகும்”
அதாவது இறைவனிடம் கிடைக்கும் நன்மைகளே என்றென்றும் நிலைத்து இருக்கும். அழியக்கூடிய இவ்வுலக இன்பத்தை விட அந்த நன்மைகளே மிகச் சிறப்பானவை. எனவே நிலையானதை புறந்தள்ளிவிட்டு நிலையற்றவைகளுக்கு முன்னுரிமை அளிக்காதீர்.
(تفسير ابن كثير 7/210)
உங்களுடைய அனைத்து செயல்களும் கண்காணிக்கப்படுகிறது, நீங்கள் பேசுவது அனைத்தும் எழுதப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குறைவாக நீங்கள் நன்மை செய்தாலும் அதற்குரிய கூலி கிடைக்கும். அதேபோல் ஒவ்வொரு கீழ்த்தரமான சிறிய காரியமும் பதிவு செய்யப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:(99:7- 8)
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْراً يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرّاً يَرَهُ
“ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான்”
அல்லாஹ்வின் அடியார்களே! நிச்சயமாக அல்லாஹ் தஆலா நமது அனைத்து காரியங்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நமது எந்த செயலும் அவனை விட்டு மறைந்துவிடாது. நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை மறுமை நாளில் இறைவன் மிக துல்லியமாக அறிவித்துவிடுவான். நமது பதிவேட்டில் உள்ளவற்றை நாளை மறுமையில் தெளிவாக கணக்கிடுவான்.
இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்(58:6)
يَوْمَ يَبْعَثُهُمُ اللَّهُ جَمِيعاً فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
“அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதனை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவைகளை அல்லாஹ் சேகரித்து வைக்கின்றான். (அவர்கள் செய்யும்) அனைத்தையும் அல்லாஹ் தெரிந்தவனாகவே இருக்கின்றான்”
எனவே நாம் அந்நாளில் அழைக்கப்படும் போது நமது நிலை எப்படி இறக்கும் என்பதை இப்போதே மனம் வருந்தி எண்ணிப் பார்க்கவேண்டும்.
அந்த நாளில் நபிதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சாட்சி சொல்வார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு முறை நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், “எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்” என்று கூறினார்கள். அப்போது நான், “தங்கள் மீது குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார்கள். எனவே நான் அவர்களுக்கு “அந்நிஸா” சூராவை ஓதிக்காட்டினேன்.
فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيداً
(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உங்களை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உங்களை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்? (4:41) எனும் வசனத்தை நான் அடைந்த போது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள், “நிறுத்துங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.( البخاري : 4582)  
நமது உலமாக்கள் கூறுகிறார்கள்: இந்த வசனத்தில் உள்ள ஆழமான கருத்துக்களையும், உம்மத்துகளுக்கு அது வலியுறுத்தும் கடுமையான எச்சரிக்கையையும் எண்ணியே நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த நேரத்தில் அழுதார்கள். நபிமார்கள் தங்கள் உம்மத்திற்கு சாட்சி சொல்வதற்காக அழைக்கப்படுவார்கள். அந்த நபிமார்கள் தங்கள் உம்மத் ஏற்றுக்கொண்டார்களா அல்லது நிராகரித்தார்களா என்று சாட்சி சொல்வார்கள். அதேபோல் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும் தனது உம்மத்தின் நிலையை சாட்சி சொல்வதற்கு அழைக்கப்படுவார்கள். அந்த நாளில் நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ‘இவர் எம்மை முழுமையாக ஏற்று அழகிய முறையில் கீழ்படிந்து நடந்தார் என்று யாரைப்பார்த்து சாட்சி கூறுகிறார்களோ, அவர் மிகப்பெரிய பாக்கியசாலி. ஏனைய உம்மத்துகளிடமும், மலக்குமார்களிடமும் அந்த நபரை பற்றி நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பெருமையாக பேசுவார்கள். (யா அல்லாஹ்! எங்களையும் அந்த நற்பாக்கியவான்களாக ஆக்கியருள்வாயாக!!)( تفسير القرطبي 5/197)
முஃமீன்களே! மலக்குமார்களும் மனிதர்கள் செய்த காரியங்களைப் பற்றி அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள்.(82:10- 12)
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
“நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் (மலக்குகளில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள். நீங்கள் செய்பவைகளையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்”
அதாவது, உங்கள் அனைத்து செயல்பாடுகளை பற்றியும் பதிவு செய்கிறார்கள்.
எல்லாம் அறிந்த அல்லாஹ் கூறுகிறான்:(50:17- 18)
إِذْ يَتَلَقَّى المُتَلَقِّيَانِ عَنِ اليَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ* مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلاَّ لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
“வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர். (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)”
மேல்கூறிய இந்த வசனத்திற்கு இறைநேசச் செல்வர் ஹசன் பசரீ ரஹ்மாதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு விளக்கம் தந்துள்ளார்கள்: ஆதமுடைய மகனே! உனது பதிவேடு உனக்கு முன்னால் விரிக்கப்பட்டுள்ளது. சங்கையான இரண்டு மலக்குகள் உனக்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உமது வலப்புறத்தில் இருப்பார். மற்றொருவர் உமது இடப்புறத்தில் இருப்பார். உமது வலப்புறத்தில் இருப்பவர் உமது நன்மைகளை பதிவு செய்துகொள்வார். இடப்புறத்தில் இருப்பவர் உமது பாவங்களை பதிவு செய்துகொள்வார். அதனால் நீ விரும்பியதை செய்துகொள். அது குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் சரியே! இப்படியே மரணம் வரை நீ செய்து கொண்டிருப்பாய், அதற்கு பிறகு  அந்த பதிவேடு சுரட்டப்பட்டு உமது கழுத்தில் தொங்கவிடப்படும். மறுமை நாளில் நீ எழுப்பப்படும் வரை அந்த பதிவேடு உன்னோடு கப்ரில்தான் இருக்கும். மறுமை அது ஒரு புத்தகமாக உனக்கு காட்சியளிக்கும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது மிக நேர்மையாகத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனை நீயே கணக்கிட்டுக்கொள்.( تفسير الطبري 17/400)
இறைவன் தனது வேதத்தில் கூறுகிறான்:(17:13- 14)
وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا* اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
“ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான். (அச்சமயம் அவனை நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று கூறுவோம்.)
ஒரு இறைநேசர் கூறியுள்ளார்கள்: இது ஒரு புத்தகம். உமது நாவுதான் அதன் பேனா, உனது உமிழ் நீர்தான் அதன் மைத்துளி, உனது உறுப்புகள்தான் அதன் பக்கங்கள். உன்னைப் பற்றிய பதிவுகள் உன்னுடனே நிறைந்திருக்கும். அதில் கூடுதலோ குறைவோ ஏற்படாது. எனவே பதிவானவற்றில் ஏதேனும் ஒன்றை நீ மறுத்தால் அப்போது உமது உறுப்புகளே அவற்றை மெய்ப்படுத்தி உனக்கெதிராக சாட்சி சொல்லும்.( تفسير القرطبي 10/230)
முஸ்லிம்களே! மறுமைநாளில் மனிதனுக்கு எதிராக பல வழிகளில் சாட்சிகள் உள்ளன என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். அவனது சொந்த உடல் உறுப்புகளே அந்த வேலையை மிக சிறப்பாக செய்யும்.
பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுவதை கேளுங்கள்(36:65)
الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
“அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிட்டு அவர்களுடைய கைகளைப் பேசும்படி செய்வோம். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.”
அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பின்வரும் சம்பவத்தை கூறுகிறார்கள்: ஒருமுறை இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களோடு நாங்கள் இருக்கும்போது, அவர்கள் சிரித்தார்கள். “நான் என் சிரிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். “அல்லாஹ் மற்றும் அவன் தூதர் (மட்டுமே) மிக அதிகம் அறிந்தவர்கள்” என்று நாங்கள் சொன்னோம். “ஒரு அடியான் தனது இறைவனிடம் பின்வருமாறு பேசிக்கொள்கிறான்:
அடியான் கேட்கிறான்: “என் இறைவனே! (நரக) இருளை விட்டு என்னை நீ காப்பாற்ற மாட்டாயா?
இறைவன் சொல்கிறான்: “ஆம்! (கண்டிப்பாக காப்பாற்றுவேன்)”
அடியான்: நிச்சயமாக என் விசயத்தில் என்னை தவிர வேறு எந்த சாட்சியையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.   
இறைவன்: உனக்கு நீயே சாட்சி சொல்ல போதுமானது. மேலும் கிராம் காதிபீன் மலக்குகளும் (உனக்கு) சாட்சி சொல்ல போதுமானது.
உடனே அந்த அடியானின் வாய் முத்திரை இடப்படும். (இந்த அடியான் செய்த காரியங்களை பற்றி) நீ பேசு என்று அவனது உறுப்புகளுக்கு கட்டளை பிறப்பிக்கப்படும். அவன் செய்த காரியங்களை பற்றி அந்த உறுப்புகள் பேசும். அந்த பேச்சும் அடியானும் தனித்தனியாக ஆக்கப்படுவார்கள். அப்போது அந்த அடியான் சொல்வான்: “என்னை விட்டு இந்த உடல் உறுப்புகள் தூரமாகி போய்விட்டதே, கைசேதமாக இருக்கிறது. இந்த உறுப்புகளுக்கு அதரவாகத்தான் நான் போராடி வந்தேன்” (مسلم : 2969) 
இந்த நேரத்தில் அந்த அடியான் மிகவும் கைசேதமடைந்த நிலையில் மிகுந்த வருத்தத்துடன் இருப்பான்.
அல்லாஹ் கூறுகிறான்:(41:21)
وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدْتُمْ عَلَيْنَا قَالُوا أَنْطَقَنَا اللَّهُ الَّذِي أَنْطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ
“அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும்”
கவனமாக கேளுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே! அவனுக்கு அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சி நடங்கள். அவன் நம்மை பகிரங்கமாகவும், கமுக்கமாகவும் கண்காணிக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தன் மீது வாழும் இந்த மனிதன் செய்த செயல்களை பற்றி நாளை மறுமையில் இந்த பூமி இறைவனிடம் சாட்சி சொல்லும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.
ஒரு முறை இறைதூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள்:(99:4)
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
“அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்””
“அதன் செய்திகள் யாது என்று உங்களுக்கு தெரியுமா?” என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். அதற்கு சஹாபாக்கள், “அல்லாஹ்வும் அவன் தூதருமே மிக அதிகம் அறிந்தவர்கள்” என்று சொன்னார்கள். “நிச்சயமாக அதன் செய்திகள் என்னவென்றால், இந்த பூமி தன் மீது வாழ்ந்த அனைத்து உம்மத்துகள் அல்லது அடியான் செய்த செயல்பாடுகளை பற்றி சாட்சி சொல்வதுவதாகும். அப்போது அந்த பூமி சொல்லும், “இன்ன நாளில் இப்படி செய்தான், அப்படி செய்தான்” என்று. இவைகளே அதன் செய்திகளாகும்” என்று நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.
யா அல்லாஹ்! உனக்கும், உனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்களுக்கும், நீ யாரையெல்லாம் பின்பற்றி நடக்க சொன்னாயோ அவர்களுக்கும் நாங்கள் முழுமையாக வழிபடுவதற்கு எங்கள் அனைவருக்கும் உதவி புரிவாயாக!!
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் : (4:59)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُم
“ஈமான்கொண்ட நல்லடியார்களே ! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்”
அல்லாஹ்வின் நல்லடியார்களே! வல்ல அல்லாஹ் நபி மீது ஸலவாத் சொல்லும் செயலை தன்னிடமிருந்தே தொடங்கி, அதில் மலக்குமார்களையும் சேர்த்து உண்மை முமின்களாகிய நம்மையும் சொல்லச்சொல்கிறான் : (33:56)
إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
“இந்த நபியின் மீது அல்லாஹ் (ஸலவாத் ஓதி) அருள்புரிகிறான். மலக்குகளும் அவருக்காக (ஸலவாத்ஓதி) அருளைதேடுகிறார்கள். மூமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்”
« مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْراً»
இறைதூதர் ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்லுகிறார்களோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்லுகிறான்" (முஸ்லிம் : 384 )
"யா அல்லாஹ் ! எங்கள் தலைவரும், எங்கள் நபியுமாகிய முஹம்மதுநபி ஸல்லல்லாஹுஅலைஹீ வஸல்லம் அவர்கள் மீதும், புனிதமிக்க அவர்களின் குடும்பத்தினரின் மீதும், தியாகம் நிறைந்த அவர்களின் தோழர்கள் மீதும் ஸலவாத் என்னும் ஈடேற்றத்தையும் ஸலாம் என்னும் அமைதியையும், பரகத் என்னும் நற்பாக்கியங்களையும் தந்தருள்வாயாக!, மேலும் நல்வழி காட்டும் கலிபாக்களாகிய அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களையும், சங்கை நிறைந்த அனைத்து தோழர்களையும், அவர்களை தொடர்ந்து வந்த தாபியீன்களையும், உலக முடிவு நாள் வரை இவர்களை அழகிய முறையில் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களாகிய எங்கள் அனைவரையும் நீ பொருந்திக்கொள்வாயாக.!!!"
யா அல்லாஹ்! மறைவாகவும் பகிரங்கமாகவும் நடக்கும் குழப்பத்திலிருந்து இந்த அமீரக தேசத்தை பாதுகாப்பாயாக!! அனைத்து இஸ்லாமிய தேசங்களிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!!
யா அல்லாஹ்! எங்கள் நோன்பையும், தொழுகையையும் ஏற்றுக் கொள்வாயாக!! நாங்கள் உன்னிடம் சொர்கத்தை கேட்கிறோம், சொல்லாலும் செயலாலும் அந்த சொர்கத்தின் பக்கம் நெருங்கும் பாக்கியத்தை உன்னிடம் கேட்கிறோம்!!! நரகிலிருந்து பாதுகாப்பு கேட்கிறோம்!
யா அல்லாஹ்! நாங்கள் நற்காரியங்கள் புரிவதற்கு உதவி செய்வாயாக!! கீழ்த்தரமான செயல்களை நாங்கள் விடுவதற்கும் எங்களுக்கு அருள் புரிவாயாக!!! இறைநம்பிக்கையை எங்களுக்கு பிரியம் உள்ளதாக ஆக்கிவைப்பாயாக!!! மேலும் அதனை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக வைப்பாயாக!!! இறைவனுக்கு நன்றி மறப்பதையும், பாவங்கள் செய்வதையும், தவறுகள் செய்வதையும் எங்களுக்கு வெறுப்பிற்குரியதாக்கி வைப்பாயாக!! எங்கள் இறைவா ! நாங்கள் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், கற்பையும், போதுமென்ற மனதையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்! எங்களுக்கு உண்மையை உண்மையாகவே காட்டுவாயாக! அதனை பின்பற்றும் பாக்கியத்தையும் காட்டுவாயாக!!! தீமையை தீமையாக காட்டுவாயாக! அதனை விட்டு நாங்கள் தவிர்ந்து விடுவதற்கும் நீ உதவி புரிவாயாக!!! எங்கள் மனைவி மக்களுக்கு நீ பரக்கத்து செய்வாயாக!!!
யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் பலன்தரக்கூடிய கல்வியை கேட்கிறோம், மேலும் அஞ்சி நடக்கும் உள்ளத்தையும், எப்போது திக்ர் செய்யும் நாவையும், விசாலமான உயர்தரமான ரிஸ்கையும், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நல் அமல்களையும், உடலில் ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்திலும் குழந்தை செல்வத்திலும் பரக்கத்தையும், நாங்கள் உன்னிடம் மன்றாடி கேட்கிறோம்.
யா அல்லாஹ்! எங்களுக்கு பலன் தரக்கூடியவற்றை எங்களுக்கு கற்றுத் தருவாயாக, நீ கற்று தந்ததை எங்களுக்கு பலனுள்ளதாக ஆக்கி வைப்பாயாக, எங்களுக்கு அறிவு ஞானத்தை அதிகப் படுத்துவாயாக!
யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களுக்கு இறை அச்சத்தை தருவாயாக, மேலும் அதை நீ தூய்மைப் படுத்துவாயாக நீயே அதனை தூய்மைப் படுத்துவதில் சிறந்தவனாக இருக்கிறாய்!
யா அல்லாஹ்! நீயே அதற்கு பொறுப்பாளனாகவும், எஜமானனாகவும் இருக்கிறாய், எங்கள் அனைத்து காரியங்களின் இறுதி முடிவை அழகாக்கி வைப்பாயாக,
யா அல்லாஹ்! எங்கள் எண்ணங்களை சீர்படுத்துவாயாக, எங்கள் மனைவிமார்களிலும், சந்ததியிலும் நீ எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக, மேலும் அவர்களை எங்களுக்கு கண் குளிர்ச்சியாக ஆக்குவாயாக!
எங்கள் நண்பர்களுக்கு உதவி புரிவாயாக! எங்கள் அந்தஸ்துகளை உயர்த்தி விடுவாயாக, எங்கள் நன்மைகளை அதிகப் படுத்துவாயாக, எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக!
யா அல்லாஹ்! எங்கள் அனைத்து பாவத்தையும் மன்னித்துவிடுவாயாக, எங்கள் அனைத்து கவலைகளையும் போக்கி விடுவாயாக, கடன்களை நிவர்த்தி செய்துவிடுவாயாக, நோயாளிகளை குணப்படுத்திவிடுவாயாக, தேவைகளை மேன்மையாக்கி விடுவாயாக மேலும் நிறைவேற்றி விடுவாயாக.
அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து பக்குவப்படுத்தும் நாயனே! எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!
                   
யா அல்லாஹ்! அமீரக தேசத்தின் எங்கள் தலைவர், எங்கள் காரியங்களின் மன்னர் ஷைகு கலீபாவையும் மற்றும் அவரது பிரதிநிதியையும், நீ நேசித்தவாறு பொருந்திக்கொண்டவாறு உதவி புரிவாயாக! மேலும் அவரது சகோதரர்களை அமீரகத்தின் நடுவர்களாக நிலைப்படுத்துவாயாக !! உயிரோடு உள்ள மற்றும் மரணித்த முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் நீ மன்னிப்பை வழங்கிடுவாயாக!!!                       
யா அல்லாஹ்! ஷைகுஜாயிது, ஷைகு மக்தூம், உனது கிருபையில் வந்தடைந்த அமீரகத்தின் மன்னர்களாகிய இவர்களது சகோதரர்கள், ஆகிய அனைவருக்கும் உனது கிருபையை பொழிவாயாக!!!
யா அல்லாஹ் !  இந்த அமீரகத்திலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை படுத்துவாயாக !!
மகத்தான அல்லாஹ்வை நினைவு கூறுங்கள், அவன் உங்களை நினைவு கூறுகிறான், மேலும் அவன் நமக்கு செய்த நிஃமத்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவன் அதனை உங்களுக்கு மேலும் அதிகப்படுத்துவான். தொழுகையை நிலைநாட்டுங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்).
மொழிபெயர்ப்பு
மௌலவி, அப்சலுள் உலமா
செய்யிது அபூஸாலிஹ் பிலாலி B.Com., DUBAI.
Contact No. +971529919346
Email : abusalih100@gmail.com



You may also like

No comments:

Powered by Blogger.